உடுமலை பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறை வருவாய் தரக்கூடிய நாவல் மரங்கள் சாகுபடி செய்வதில் ஒரு சில விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
உடுமலை பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறை வருவாய் தரக்கூடிய நாவல் மரங்கள் சாகுபடி செய்வதில் ஒரு சில விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
போடிப்பட்டி,
உடுமலை பகுதியில் ஆண்டுக்கு ஒருமுறை வருவாய் தரக்கூடிய நாவல் மரங்கள் சாகுபடி செய்வதில் ஒரு சில விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
சுட்ட பழம்
சாலையோரங்கள், கிணற்றுமேடு என்று பல இடங்களில் செழித்து வளர்ந்திருந்த நாவல் மரங்கள் பலவும் இன்று அழிக்கப்பட்டு விட்டது.சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா என்று இறைவன் முருகன் அவ்வைப் பாட்டியிடம் கேட்டதாகக் கூறப்படும் அற்புதக்கனி இன்று அபூர்வக் கனியாக மாறிவிட்டது என்று சொல்லலாம். மரத்துக்கடியில் உதிர்ந்து கிடக்கும் நாவல் பழங்களைப் பொறுக்கி கால்சட்டைப் பைகளில் நிரப்பிக் கொண்டு ஒவ்வொன்றாய்த் தின்று கொண்டிருக்கும் போது, நாவின் ஊதா நிறம் பார்த்து ‘டேய் எனக்குடா' என்று கேட்கும் நண்பனுக்கு 2 பழங்களைத்தந்து விட்டு, மொத்த சொத்தையும் எழுதிக்கொடுத்தது போல பெருமிதமாய்ப் பார்க்கும் சிறுவர்களை இன்று பார்க்க முடிவதில்லை.
சாலையோரங்களில் கம்பீரமாக நின்று கொண்டு பழங்களை மட்டுமல்லாமல் நிழலையும் தந்ததுடன் காற்றுத் தடுப்பானாகவும் செயல்பட்ட நாவல் மரங்கள் சாலை விரிவாக்கங்களால் இருந்த தடம் தெரியாமல் போய் விட்டது. ஆழ்துளைக் கிணறுகளை நம்பியே பலரும் விவசாயம் செய்யும் நிலையில் கிணற்று மேட்டு நாவல் மரங்கள் கண்டுகொள்ளப்படாமல் காய்ந்து போனது. இந்தநிலையில் உடுமலை பகுதியில் ஒருசில விவசாயிகள் தனிப்பயிராகவும், வேலிப்பயிராகவும் நாவல் மரங்களை சாகுபடி செய்ய முன்வந்துள்ளனர்.
சாகுபடியில் ஆர்வம்
உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இதுதவிர வாழை, கரும்பு, மக்காச்சோளம் மற்றும் காய்கறிகள் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. ஜல்லிப்பட்டி, வாளவாடி உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் மரப்பயிர்களான மா, கொய்யா, சப்போட்டா போன்றவற்றை சாகுபடி செய்கின்றனர்.
பொதுவாக நாவல் சாகுபடியில் வருவாய் ஈட்டுவதற்கு சுமார் 10 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என்பதும், மரங்களிலிருந்து அறுவடை செய்வது சுலபமான விஷயம் இல்லை என்பதும் விவசாயிகள் நாவல் சாகுபடியில் ஆர்வம் காட்டாததற்கு கூறப்படும் காரணங்களாகும்.
60 ஆண்டுகள் மகசூல்
அதேநேரத்தில் நடவு செய்யப்பட்டு 10 ஆண்டுகளில் மகசூல் கொடுக்கத் தொடங்கினால் குறைந்த பட்சம் 60 ஆண்டுகள் வரை மகசூல் கொடுக்கக்கூடியது என்பது சிறப்பம்சமாகும். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ராம் ஜாமூன் எனப்படும் வட இந்திய ரக நாவல் மரங்களே தற்போது சாகுபடி செய்யப்படுகிறது. ஆரம்ப கட்டங்களில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. வறட்சியைத் தாங்கி நீண்ட காலம் வரை மகசூல் கொடுக்கக்கூடியது. முழுவதும் இயற்கை முறையில் இயற்கை உரங்களைப் பயன்படுத்தி சாகுபடி மேற்கொண்டுள்ளோம். இதனால் நல்ல மகசூல் கிடைப்பதுடன், பழங்கள் மிகவும் சுவையானதாக இருக்கிறது.
ஒரு கிலோ ரூ.300
அறுவடை செய்வதில் சிரமம் இருந்தாலும் வியாபாரிகள் நேரடியாக தோட்டத்துக்கு வந்து அவர்களே பழங்களைப் பறித்து எடுத்துச்செல்கிறார்கள். தற்போது வெளிச்சந்தையில் இந்த ரக பழங்கள் ஒரு கிலோ ரூ.300-க்கு மேல் விற்பனையாகிறது.
ஆனாலும் விவசாயிகளுக்கு குறைந்த தொகையே கிடைக்கிறது. நேரடியாக சந்தைப்படுத்த முடிந்தால் நல்ல லாபம் ஈட்ட முடியும். விவசாயிகள் தரிசாக விட்டு வைத்திருக்கும் நிலத்தில் நாவல் சாகுபடி செய்து ஆண்டுக்கு ஒருமுறை வருவாய் ஈட்டலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story