மிளகாய்பொடி தூவி மூதாட்டியிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு


மிளகாய்பொடி தூவி மூதாட்டியிடம்  5 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 17 Aug 2021 11:54 PM IST (Updated: 17 Aug 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் மிளகாய்பொடி தூவி மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறித்த பெண் கைது செய்யப்பட்டார்.

காரைக்குடி,

காரைக்குடியில் மிளகாய்பொடி தூவி மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறித்த பெண் கைது செய்யப்பட்டார்.

நகை பறிப்பு

காரைக்குடி அன்னை இந்திரா தெருவில் வசிப்பவர் ஜெயசக்தி (வயது 65). இவர் மதிய வேளையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனியாக படுத்து உறங்கி உள்ளார். அப்போது அவர் வீட்டுக்கு வந்த ஒரு பெண் அவர் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை அறுத்து திருட முயன்றுள்ளார். இதனை உணர்ந்து விழித்துக்கொண்ட ஜெயசக்தி அப்பெண்ணோடு போராடி சங்கிலியை மீட்க முயன்றார்.
அப்பெண்ணோ தான் கொண்டு வந்திருந்த மிளகாய் பொடியை ஜெயசக்தியின் முகத்தில் தூவியதோடு, அருகில் கிடந்த தலையணையை எடுத்து அவரது முகத்தில் வைத்து அழுத்தினார். இதனால் அவர் உயிரை காப்பாற்றிக்கொள்ள போராட இச்சந்தர்ப்பத்தில் அப்பெண் சங்கிலியை அறுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

பெண் கைது

உடனே ஜெயசக்தி திருடி, திருடி, என்று சத்தமிட அவர் போட்ட சத்தத்தில் அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து நடந்த சம்பவத்தை கேள்விப்பட்டு அப்பெண்ணை தேடியுள்ளனர். அப்போது ஜெயசக்தி வீட்டு அருகில் உள்ள கழிவறையில் ஒரு பெண் நின்று கொண்டிருப்பதை கண்டு அவரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்பெண்ணோ எனது வீட்டு கோழியை காணவில்லை. அதை தேடி வந்தேன் என்று கூறியுள்ளார். ஆனாலும் சந்தேகப்பட்ட அவர்கள் இதுகுறித்து தெற்கு போலீசாருக்கு தகவல் கொடுக்க போலீசார் விரைந்து வந்து அப்பெண்ணிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அப்பெண் அதே பகுதியை சேர்ந்த விமலா (38) என்றும், மூதாட்டியிடம் சங்கிலியை பறித்தவர் என்றும் அதனை கழிவறையில் போட்டு வைத்திருப்பதும் தெரியவந்தது.அதன் பேரில் 5 பவுன் தங்க சங்கிலி மீட்கப்பட்டது. விமலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

Next Story