சிதம்பரத்தில் வீரனார் கோவிலை இடித்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்
சிதம்பரத்தில் வீரனார் கோவிலை இடித்ததை கண்டித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சிதம்பரம்,
சிதம்பரம் சபாநாயகர் தெருவில் உள்ள அரசு நந்தனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு பழமை வாய்ந்த வீரனார் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவில், அதே பகுதியில் உள்ள மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான இடத்தில் இருந்ததாகவும், மடத்திற்கு சொந்தமான கோவில் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீரனார் கோவில் கட்டப்பட்டுள்ளதாக கூறி நேற்று காலை நெடுஞ்சாலைத் துறையினர், வருவாய்த் துறையினருடன் சேர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் வீரனார் கோவிலை இடித்து அகற்றினர்.
போராட்டம்
இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் மற்றும் இந்து முன்னணியினர் கோவில் இருந்த இடத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், கோவிலை இடித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் மடத்திற்கு அதிபரான மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள், இடிக்கப்பட்ட கோவில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சிதம்பரம் நகர இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், தாசில்தார் ஆனந்த் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். அப்போது பொதுமக்கள், கோவில் இருந்த இடம் மடத்திற்கு சொந்தமானது என்று கூறி, வீரனார் சாமி சிலையை இடித்த இடத்திலேயே மீண்டும் வைத்தனர்.
தொடர்ந்து மவுன சுந்தரமூர்த்தி சுவாமிகள், வீரனார் சுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story