சிதம்பரம் அருகே இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய ஆட்டோ டிரைவா் கைது
சிதம்பரம் அருகே இளம்பெண்ணை கர்ப்பிணியாக்கிய ஆட்டோ டிரைவரை போலீசாா் கைது செய்தனா்.
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே உள்ள சிவபுரி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவருடைய மகன் ராஜா (வயது 36). ஆட்டோ டிரைவரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இவர், முதல் திருமணத்தை மறைத்து தனது ஆட்டோவில் அடிக்கடி பயணம் செய்யும் சித்தலப்பாடி பகுதியை சேர்ந்த 30 வயதுடைய பெண்ணை கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி ராஜா, உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.
தற்போது அந்த பெண் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி ராஜாவிடம் சென்று, அந்த பெண் வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்த ராஜா, தனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர் என்றும், அதனால் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறி அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண், சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பொன்மகரம் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தார்.
Related Tags :
Next Story