கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மாவட்டந்தோறும் தொழில்நுட்ப நிபுணர் குழு; கர்நாடக சுகாதாரத்துறை உத்தரவு
கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மாவட்டந்தோறும் தொழில்நுட்ப நிபுணர் குழுக்களை அமைக்க வேண்டும் என்று மாவட்டங்களுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜாவித் அக்தர், மாவட்ட நிர்வாகங்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
புள்ளி விவரங்கள்
கர்நாடகத்தில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்ள மாநில அளவில் தொழில்நுட்ப நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு வழங்கிய ஆலோசனையின்படி மாவட்ட நிர்வாகங்கள் மாவட்ட அளவில் தொழில்நுட்ப நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். ஏற்கனவே கொரோனா 2 அலைகளை எதிர்கொண்ட அனுபவம் உள்ளது. அத்துடன் அதன் 3-வது வருகிற அக்டோபர்-நவம்பர் மாதங்களில் பரவலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய-மாநில அரசுகள், ஐ.சி.எம்.ஆர்., எய்ம்ஸ், உலக சுகாதார நிறுவனம் மற்றும் பிற அமைப்புகளின் வழிகாட்டுதல்களை நிபுணர் குழு பின்பற்றும். மாவட்ட நிபுணர் குழுக்கள் கொரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை ஆய்வு செய்ய வேண்டும். அந்த விவரங்கள் மற்ற மாவட்டங்கள், மாநிலங்கள் மற்றும் தேசிய அளவில் ஒப்பீடு செய்து பார்க்க வேண்டும்.
ஆலோசனைகளை வழங்கலாம்
அதன் அடிப்படையில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகங்களுக்கு மத்திய-மாநில அரசுகளின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு ஆலோசனைகளை வழங்க வேண்டும். இந்த மாவட்ட நிபுணர் குழுவில் நுரையீரல் நிபுணர், மூத்த பொது மருத்துவர், மூத்த குழ்நதைகள் நல டாக்டர், மகப்பேறு மருத்துவர், மூத்த நுண்ணிய உயிரியல் நிபுணர், மருத்துவ அதிகாரி, மூத்த ஆயுஸ் பொது மருத்துவர் ஆகியோர் இடம் பெற வேண்டும்.
இந்த குழுவில் மாவட்ட சுகாதால அதிகாரி மற்றும் மாவட்ட அறுவை சிகிச்சை நிபுணர் ஆகியோரை சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்க வேண்டும்.
15 நாளுக்கு ஒரு முறை கூட்டம்
இந்த நிபுணர் குழு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு ஒரு முறையாவது கூடி ஆலோசிக்க வேண்டும். தேவைப்பட்டால் இந்த குழுவினர் அடிக்கடி கூடி ஆலோசித்து மாவட்டங்களுக்கு ஆலோசனைகளை வழங்கலாம்.
கூட்டம் குறித்த அறிக்கையை சுகாதாரத்துறை கமிஷனருக்கு அனுப்ப வேண்டும். மாவட்ட நிபுணர் குழுக்கள் என்ன முடிவுகளை எடுக்கலாம் என்பது குறித்து மாநில அளவில் செயல்படும் நிபுணர் குழு விதிமுறைகளை வகுக்கும்.
இவ்வாறு ஜாவித் அக்தர் குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story