மேட்டூர் அணை பண்ணவாடி பரிசல் துறையில் வெளியே தெரிந்த நந்தி சிலை
மேட்டூர் அணை பண்ணவாடி பரிசல் துறையில் தண்ணீரில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை வெளியே தெரிய தொடங்கி உள்ளது.
மேட்டூர்
மேட்டூர் அணை
மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன்பு பண்ணவாடி கிராம மக்கள் வழிபாடு செய்து வந்த ஜலகண்டேஸ்வரர் கோவில், கிறிஸ்தவ ஆலயம், பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் அமைந்திருந்தன. அணை கட்டி முடிக்கப்பட்ட பின்பு இந்த கிராம மக்கள் வெளியேற்றப்பட்டு அணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டது.
இதனால் இந்த பண்ணவாடி, கோட்டையூர், செட்டிப்பட்டி போன்ற கிராமங்கள் தண்ணீரில் மூழ்கி அணையின் நீர்த்தேக்க பகுதிகளாக மாறியது. இந்த கிராம மக்கள் வழிபாடு செய்து வந்த ஜலகண்டேஸ்வரர் கோவில், கிறிஸ்தவ ஆலயம் உள்பட பல்வேறு ஆலயங்கள் தண்ணீரில் மூழ்கின.
மேட்டூர் அணை நீர்மட்டம் உயரும்போது, இந்த ஆலயங்கள் தண்ணீரில் முழுமையாக மூழ்குவதும், அணை நீர்மட்டம் குறையும் நேரங்களில் கிறிஸ்தவ ஆலய கோபுரமும் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலையும் தண்ணீர் பரப்புக்கு மேலே காட்சி அளிக்கும்.
நந்தி சிலை
குறிப்பாக மேட்டூர் அணை நீர்மட்டம் 80 அடிக்கு கீழ் குறையும் நேரங்களில் கிறிஸ்தவ ஆலய கோபுரமும், அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறையும் நேரங்களில் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலையும் தண்ணீர் மட்டத்திற்கு மேலே பொதுமக்களுக்கு காட்சி அளிக்க தொடங்கும்.
அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் முதல் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. கடந்த 1-ந் தேதி முதல் கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. திறக்கப்படும் தண்ணீரின் அளவை விட அணைக்கு வரும் நீர்வரத்து குறைவாக உள்ளது.
இதனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அணையின் நீர்மட்டம் 80 அடிக்கு கீழ் குறைந்ததால் கிறிஸ்தவ ஆலய கோபுரம் தண்ணீர் மட்டத்திற்கு மேலே காட்சி அளித்தது.
கழுத்து பகுதி வரை
தற்போது அணையின் நீர்மட்டம் 70 அடிக்கு கீழ் குறைந்து நேற்று 69 அடியாக உள்ளது. இதனால் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலையும் தண்ணீர் மட்டத்திற்கு மேலே காட்சியளிக்க தொடங்கி உள்ளது. நேற்றைய நிலவரப்படி நந்தி சிலையின் கழுத்து பகுதி வரை காட்சி அளித்தது.
Related Tags :
Next Story