சேலத்தில், பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்ற 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காவலாளி கைது சில்மிஷம் செய்த எலக்ட்ரீசியனும் சிக்கினார்


சேலத்தில், பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்ற 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காவலாளி கைது சில்மிஷம் செய்த எலக்ட்ரீசியனும் சிக்கினார்
x
தினத்தந்தி 18 Aug 2021 3:31 AM IST (Updated: 18 Aug 2021 3:31 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில், பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்ற 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காவலாளி கைது செய்யப்பட்டார். அந்த மாணவியிடம் சில்மிஷம் செய்த எலக்ட்ரீசியனும் சிக்கினார்.

சூரமங்கலம்
10-ம் வகுப்பு மாணவி
சேலம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர், 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 8-ந் தேதி இரவு பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். 
அப்போது அதே பகுதியை சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக பணியாற்றிவரும் சேகர் (வயது 55) என்பவர் அந்த மாணவியிடம் எங்கே செல்கிறாய் என்று விசாரித்தார். அதற்கு அவர் தனது பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு வீட்டைவிட்டு வந்துள்ளதாக கூறினார்.
பாலியல் பலாத்காரம்
இதையடுத்து சேகர் அந்த மாணவியை அடுக்குமாடி குடியிருப்பில் தங்கிக் கொள்ளுமாறு கூறினார். அதன்பேரில் அந்த சிறுமி அடுக்குமாடி குடியிருப்பில் அன்று இரவு தங்கினார். அந்த நேரத்தில் சேகர், அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
பின்னர் 9-ந் தேதி காலை மாணவி எழுந்து அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியே வந்தார். அவர் பாட்டி வீட்டுக்கு செல்வதற்காக அழகாபுரம் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.
சில்மிஷம்
அப்போது மாணவிக்கு அறிமுகமான அழகாபுரத்தை சேர்ந்த எலக்ட்ரீசியன் மாவீரன் (33) என்பவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அவர் மாணவியிடம் எங்கே செல்கிறாய்? என விசாரித்துள்ளார். எனது பாட்டி வீட்டு்க்கு செல்கிறேன் என மாணவி கூறியுள்ளார். 
இதை கேட்ட எலக்ட்ரீசியன், உனது பாட்டி வீட்டிற்கு அழைத்து செல்கிறேன் எனக்கூறி, மோட்டார் சைக்கிளில் அந்த பகுதியில் உள்ள நகரமலை அடிவாரத்திற்கு மாணவியை அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து அவர் மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 
பின்னர் அந்த பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இருந்ததால் மாவீரன் அந்த சிறுமியை மோட்டார் சைக்கிளில் மீண்டும் அழகாபுரம் பஸ் நிறுத்தத்தில் கொண்டு வந்து விட்டு விட்டு சென்று விட்டார்.
கைது
பின்னர் அந்த சிறுமி அழகாபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அவர் அங்கு நிற்பது குறித்த தகவல் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதையடுத்து அந்த சிறுமியை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். மேலும் தனது பெற்றோரிடம் நடந்த சம்பவங்களை அந்த சிறுமி கூறியுள்ளார். 
இந்த சம்பவம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். 
அதன்பேரில் சேகர், மாவீரன் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தார்.

Next Story