வாலிபர் கொலை வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு


வாலிபர் கொலை வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 18 Aug 2021 8:17 AM GMT (Updated: 18 Aug 2021 8:17 AM GMT)

வாலிபர் கொலை வழக்கில் ஆட்டோ டிரைவருக்கு ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

செங்கல்பட்டு,

சென்னை நெடுக்குன்றம் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் சாதிக் (வயது 23). மேற்கு தாம்பரம் கன்னடபாளையம் அன்னை சத்யாநகர், எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் ராம்கி (23). ஊரப்பாக்கம், ஏரிக்கரைத்தெருவை சேர்ந்தவர் மணி என்ற ஓலைமணி (30). இவர்கள் 3 பேரும் ஆட்டோ டிரைவர்கள்.

ராம்கியின் வீட்டின் அருகேயுள்ள ஒரு இளம்பெண்ணுக்கும் சாதிக் என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் இருவரும் அடிக்கடி பேசி பழகிவந்தனர். இதனை தெரிந்த ராம்கி சாதிக்கிடம் அந்த பெண்ணுடன் பழகுவதை நிறுத்துமாறு கூறியுள்ளார்.

வெட்டிக்கொலை

இதனை மறுத்த சாதிக் அந்த பெண்ணுடன் பழகவே ஆத்திரம் அடைந்த ராம்கி, சாதிக்கை கொலை செய்ய திட்டமிட்டார். ஆட்டோ டிரைவர் மணியையும் அழைத்து பேசி கடந்த 26.6.2006 அன்று இரவு 9 மணியளவில் கன்னடபாளையத்தில் வைத்து சாதிக்கை சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் சாதிக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆயுள் தண்டனை

வழக்கை விசாரித்த நீதிபதி அய்யப்பன் இந்த வழக்கின் தீர்ப்பை நேற்று வழங்கினார். அதில் ராம்கி என்பவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். மணி என்ற ஓலைமணி வழக்கு விசாரணையில் இருக்கும் போதே இறந்துவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் ஆனூர் வெங்கடேசன் ஆஜரானார்.

Next Story