சீர்காழி பகுதியில் மயான கொட்டகைகள், சாலைகளை சீரமைக்க நடவடிக்கை ஒன்றியக்குழு கூட்டத்தில் அறிவிப்பு


சீர்காழி பகுதியில் மயான கொட்டகைகள், சாலைகளை சீரமைக்க நடவடிக்கை ஒன்றியக்குழு கூட்டத்தில் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Aug 2021 5:25 PM IST (Updated: 18 Aug 2021 5:25 PM IST)
t-max-icont-min-icon

சீர்காழி பகுதியில் மயான கொட்டகைகள், சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.

சீர்காழி,

சீர்காழியில் ஒன்றியக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் கமலஜோதி தேவேந்திரன் தலைமை தாங்கினார். ஆணையர்கள் அருள்மொழி, கஜேந்திரன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் உஷாநந்தினி பிரபாகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார். கூட்டத்தில் உறுப்பினர்களிடையே நடந்த விவாதம் வருமாறு:-

ரீமா ராஜ்குமார் (அ.தி. மு.க.):- அகணி ஊராட்சிக்கு உட்பட்ட ராமாபுரம், ஏனாகுடி, மன்னன் கோவில் ஆகிய பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடை தனியார் இடத்தில் செயல்பட்டு வருகிறது. அங்கு நிரந்தர ரேஷன் கடை கட்டிடம் அமைத்துத்தர வேண்டும்.

ஆனந்தி மரியதாஸ் (அ.தி. மு.க.):- திருப்புங்கூர் ஊராட்சியில் உள்ள கே.பி.எஸ்.மணி நகருக்கு தார்ச்சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவேண்டும்.

ஜான்சிராணி (சுயேச்சை):- திருவெண்காடு வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எங்கே உள்ளது என்பது தெரியாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். அலுவலகம் எங்கே செயல்படுகிறது என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நடராஜன் (அ.தி.மு.க.):- வேளாண்துறை சார்பில் குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் உண்மையான விவசாயிகள் பயன் பெறவில்லை. இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும். நெப்பத்தூர் சாலையில் நடு வழியில் உள்ள மின்கம்பங்களை அப்புறப்படுத்த ேவண்டும்.

விஜயகுமார் (அ.தி.மு.க.):- திட்டை கன்னிக்கோவில் சாலையில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும். வெள்ளப்பள்ளம் கிராமத்தில் உள்ள சுடுகாட்டுக்கு சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சிகள்) கஜேந்திரன்:- நிதி நிலைமைக்கேற்ப உறுப்பினர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.

ஆணையர் அருள்மொழி:- சீர்காழி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மயான சாலைகள், மயான கொட்டகைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கமல ஜோதி தேவேந்திரன் (தலைவர்):- ஒன்றிய குழு உறுப்பினர்கள், அரசு ஊழியர்கள் கொரோனா விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். உறுப்பினரின் கோரிக்கைகள் படிப்படியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

கூட்டத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒன்றிய பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மேலாளர் சசிகுமார் நன்றி கூறினார்.

Next Story