குலசேகரன்பட்டினத்தில் புரோட்டா மாஸ்டரை கொன்றது என்? மனைவி பரபரப்பு வாக்குமூலம்
குலசேகரன்பட்டினத்தில் புரோட்டா மாஸ்டரை கொன்றது என்? என அவரது மனைவி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
குலசேகரன்பட்டினம்:
"தினமும் மதுபோதையில் சித்ரவதை செய்ததால் கணவரை கொன்றேன்" என கைதான மனைவி குலசேகரன்பட்டினம் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
புரோட்டா மாஸ்டர் கொலை
தூத்துக்குடி மாவட்டம் மணியாச்சியை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 45). இவர் காயல்பட்டினத்தில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். கடந்த 17-ந் தேதி அருணாசலம் வீட்டில் கம்பியால் தாக்கப்பட்டும், கழுத்து நெரிக்கப்பட்டும் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இது தொடர்பாக குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரது மனைவி பேச்சியம்மாள், மாமியார் சுடலைவடிவு ஆகியோரை கைது செய்தனர். இந்த நிலையில் போலீசாரிடம் பேச்சியம்மாள் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
காயல்பட்டினத்தில் வேலை
எனது கணவர் அருணாசலத்திற்கு சொந்த ஊர் மணியாச்சி. கடந்த 15 வருடங்களுக்கு முன்பு எங்களுக்கு திருமணம் நடந்தது. 11 வயதில் மகள் உள்ளார்.
கணவருக்கு மணியாச்சியில் உருப்படியான வேலை கிடைக்காததால், எனது பிறந்த ஊரான குலசேகரன்பட்டினத்தில் வந்து குடியேறினோம். அவருக்கு நன்றாக புரோட்டா போடத்தெரியும் என்பதால் காயல்பட்டினத்தில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலைக்கு சேர்ந்தார். காலை 10 மணிக்கு ஓட்டல் வேலைக்கு செல்லும் அவர், இரவு வீடு திரும்ப 12 மணியாகி விடும்.
மதுபோதையில் தகராறு
அதேசமயம் வேலை முடிந்து வீட்டுக்கு வரும் அவர் தினமும் மதுகுடித்து விட்டு வர ஆரம்பித்தார். மேலும் மதுபோதையில் என்னை அடித்து துன்புறுத்தினார். குடும்ப செலவுக்கும் அவர் பணம் கொடுப்பதில்லை.
சம்பவத்தன்று இரவு வழக்கம்போல் அவர் மதுகுடித்து விட்டு வீட்டு வந்து என்னிடம் தகராறு செய்தார். திடீரென்று எனது இடது கை சுண்டு விரலை கடித்து காயப்படுத்தி இரும்பு கம்பியால் தாக்கினார். இதனால் எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. அவர் கையில் வைத்திருந்த இரும்பு கம்பியை பிடுங்கி திருப்பி தாக்கினேன்.
தாயாரை அழைத்தேன்
அவர் இரும்பு கம்பியால் என்னை கையில் தாக்கியதால் வலியால் துடித்தேன். மேலும், எனக்கு கை வலி அதிகமாக இருந்தால், அருகில் வசித்து வரும் எனது தாயாரை வீட்டுக்கு அழைத்து வந்தேன். அப்போது எனது கணவர் மதுபோதையில் மயங்கி கிடந்தார். ஆத்திரத்தில் இருந்த நான், தாயாருடன் சேர்ந்து கணவரின் கழுத்தை எனது மகளின் சுடிதார் துணியால் நெரித்தேன். இதில் அவரது உடல் அசைவற்று கிடந்தது.
உடனே 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து உடல்நிலை சரியில்லாத எனது கணவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து ெசல்ல வருமாறு கூறினேன். அதன்பின்னர் கணவரின் அண்ணன் ராஜாவிற்கு போன் செய்து, அவர் மயங்கி கிடப்பதாக தகவல் தெரிவித்தேன்.
தடுக்கி விழுந்து இறந்ததாக...
சிறிது நேரத்தில் 108 ஆம்புலன்ஸ் வந்தது. அதில் வந்தவர்கள் எனது கணவரை சோதித்து விட்டு இறந்து விட்டதாக கூறி சென்றனர். அவர்கள் குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதன் அடிப்படையில் எனது வீட்டுக்கு வந்த குலசேகரன்பட்டினம் போலீசாரிடம் எனது கணவர் தடுக்கி விழுந்து இறந்து விட்டதாக கூறினேன். போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, நடந்ததை கூறினேன். போலீசார் என்னையும், தாயாரையும் கைது செய்தனர்.
இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story