தூத்துக்குடி தட்டப்பாறை, மீளவிட்டான் இடையே இரட்டை பாதையில் பயணிகள் ரெயிலை இயக்க பாதுகாப்பு ஆணையர் அனுமதி


தூத்துக்குடி தட்டப்பாறை, மீளவிட்டான் இடையே இரட்டை பாதையில் பயணிகள் ரெயிலை இயக்க பாதுகாப்பு ஆணையர் அனுமதி
x
தினத்தந்தி 18 Aug 2021 6:48 PM IST (Updated: 18 Aug 2021 6:48 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி தட்டப்பாறைமீளவிட்டான் இடையேயான இரட்டை ரெயில் பாதையில் பயணிகள் ரெயிலை இயக்க ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளித்து உள்ளார்.

தூத்துக்குடி:
தூத்துக்குடி தட்டப்பாறை, மீளவிட்டான் இடையேயான இரட்டை ரெயில் பாதையில் பயணிகள் ரெயிலை இயக்க ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அனுமதி அளித்து உள்ளார்.
இரட்டை ரெயில் பாதை
மதுரையில் இருந்து தூத்துக்குடி, நெல்லைக்கு இரட்டை ரெயில் பாதை அமைக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது. இதில் கங்கைகொண்டான் முதல் மணியாச்சி வரை, கடம்பூரில் இருந்தும் தட்டப்பாறை வரையிலான பணிகளை முதல்கட்டமாக விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
அதன்படி, தென்மாவட்டத்தில் முதலாவதாக மணியாச்சி முதல் தட்டப்பாறை வரையிலான இரட்டை ரெயில் பாதை பணிகள் முடிக்கப்பட்டன. இந்த பாதையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ரெயில் வெள்ளோட்டம் விடப்பட்டது. தொடர்ந்து அதிவேகத்தில் ரெயிலை இயக்கி சோதனை செய்யப்பட்டது. அப்போது, அதிகபட்சமாக ரெயில் 123 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்தது. 14 கிலோ மீட்டர் தூரத்தை 8 நிமிடத்தில் கடந்தது. இதைத் தொடர்ந்து அந்த பாதைக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
ஆய்வு
இதைத் தொடர்ந்து தூத்துக்குடி தட்டப்பாறையில் இருந்து மீளவிட்டான் ரெயில் நிலையம் வரை 7 கிலோ மீட்டர் தூர ரெயில் பாதை அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அந்த பணிகள் தற்போது நிறைவடைந்தன.
அதன்படி தட்டப்பாறையில் இருந்து மீளவிட்டான் வரையிலான 7 கிலோ மீட்டர் இரட்டை ரெயில் பாதையில் பெங்களூரு தென்சரக ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார்ராய் கடந்த 14-ந் தேதி ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வுக்கு பிறகு, புதிய ரெயில் பாதையில் முதலில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிகள் ரெயிலை இயக்கலாம் என்றும், தொடர்ந்து படிப்படியாக ரெயிலின் வேகத்தை 100 கிலோ மீட்டர் வரை அதிகரிக்கலாம் என்றும் அனுமதி அளித்து உள்ளார்.
அனுமதி
இதைத் தொடர்ந்து அந்த பணிகள் அனைத்தும் நேற்று மாலை 4 மணியுடன் முடிக்கப்பட்டு பயணிகள் ரெயிலை இயக்க அனுமதிக்கப்பட்டது.
இதனால் தெற்கு ரெயில்வே கூடுதல் கோட்ட மேலாளர் ரமேஷ் பாபு ரெயிலில் (டிராக் ரெக்கார்டிங் கார்) பயணம் செய்து அனைத்து பணிகளும் முழுமையாக முடிக்கப்பட்டு உள்ளதா? பாதுகாப்பு ஆணையர் அறிவுறுத்திய பணிகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்பட்டு உள்ளதா? என்று ஆய்வு செய்தார். தொடர்ந்து பயணிகள் ரெயில் புதிய ரெயில் பாதையில் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதனால் தூத்துக்குடிக்கு வரும் ரெயில்கள் புதிய பாதையிலும், தூத்துக்குடியில் இருந்து செல்லும் ரெயில்கள் பழைய ரெயில் பாதையிலும் இயக்கப்பட இருப்பதாக ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story