புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் தற்கொலை


புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 18 Aug 2021 8:48 PM IST (Updated: 18 Aug 2021 8:48 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் உள்ளிட்ட வெவ்வேறு இடங்களில் புதுமாப்பிள்ளை உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

திண்டுக்கல்: 


கூலித்தொழிலாளி 
திண்டுக்கல் சாமியார் தோட்டம் கன்னிமார் நகரை சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன் (வயது 23). கூலித்தொழிலாளி. இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூரை சேர்ந்த அமலாராணி என்பவரை திருமணம் செய்து மாமியார் வீட்டிலேயே வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல்லுக்கு வந்து வேலை பார்க்க தொடங்கிய அவர், வாடகைக்கு வீடு எடுத்து தங்கினார். பின்னர் தனது மனைவியை திண்டுக்கல்லுக்கு வரும்படி அழைத்தார். ஆனால் அவர் வரவில்லை. 

பலமுறை திருப்பூருக்கு சென்று தன்னுடன் குடும்பம் நடத்த வரும்படி அழைத்தும் அமலாராணி வராததால் மனமுடைந்த முத்துக்கிருஷ்ணன் நேற்று தனது வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுமாப்பிள்ளை 
இதேபோல் நிலக்கோட்டை அருகே ஏ.ஆவாரம்பட்டியை சேர்ந்த ராகவேந்திரன் (28). கூலித்தொழிலாளி. கடந்த 5 மாதத்திற்கு முன்பு இவருக்கு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் அவருக்கு வயிற்றுவலி இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று, விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராகவேந்திரன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து விளாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாவுத்உசேன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தீக்குளித்து தற்கொலை
வேடசந்தூர் அருகே உள்ள தொட்டணம்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (25). கொத்தனார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர், தனது அக்காள் வளர்செல்வி வீட்டில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாதபோது ரஞ்சித்குமார், தனது உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்துகொண்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 

பின்னர் அவர், மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு ரஞ்சித்குமார் பரிதாபமாக இறந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக ரஞ்சித்குமார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

பழனி சவுராஷ்டிரா தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (40). இவர் பட்டப்படிப்பு முடித்துள்ளார். ஆனால் இவர் கூலி வேலை செய்து வந்தார். இந்தநிலையில் படித்த படிப்புக்கு சரியான வேலை கிடைக்காததால் மனமுடைந்து காணப்பட்ட கோவிந்தராஜ், நேற்று தனது வீட்டில் மதுவில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story