தரமற்ற உணவு பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தல்
தர்மபுரி மாவட்டத்தில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தினார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் தரமற்ற உணவு பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் திவ்யதர்சினி அறிவுறுத்தினார்.
ஆலோசனை கூட்டம்
தர்மபுரி மாவட்டத்தில் உணவு பாதுகாப்பு துறை செயல்பாடுகள் குறித்த அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் திவ்யதர்சினி தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராமதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயகுமார், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் பானு சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் கலெக்டர் திவ்யதர்சினி பேசியதாவது:-
தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த உணவு வணிகர்கள் அனைவரும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் மற்றும் பதிவு சான்றிதழை கட்டாயம் பெறவேண்டும். தடை செய்யப்பட்ட பாலிதின் பை உபயோகத்தை முழுமையாக தவிர்க்க வேண்டும். பான்மசாலா, குட்கா ஆகிய பொருட்களின் விற்பனை, தரமற்ற உணவு பொருட்கள் விற்பனையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பணியாளர்களுக்கு தடுப்பூசி
உணவு வணிகர் சங்கத்தினர், ஓட்டல் உரிமையாளர் சங்கத்தினர் தங்கள் பணியாளர்களுக்கு 100 சதவீதம் கொரோனா தொற்று தடுப்பூசி போடப்பட்டு உள்ளதை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட நிர்வாகம் நடைமுறைப்படுத்தும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை சரியாக பின்பற்றி உணவு பாதுகாப்பு துறையின் பணிகளுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அசோகன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சிவகாந்தி, ஓட்டல் உரிமையாளர்கள், வணிகர்கள், கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story