புதிய கடைகள் ஏலம்: தஞ்சை மாநகராட்சிக்கு ரூ.11 கோடி வருவாய்
புதிய கடைகள் ஏலம் மூலம் தஞ்சை மாநகராட்சிக்கு ரூ.11 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
தஞ்சாவூர்,
தஞ்சை பழைய பஸ் நிலையம் மற்றும் எதிரே உள்ள திருவையாறு பஸ் நிலையத்தில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கடைகள் கட்டப்பட்டுள்ளன. பழைய பஸ் நிலையத்தில் 54 கடைகளும், 2 உணவகங்களும், திருவையாறு பஸ் நிலையத்தில் 31 கடைகளும், 8 உணவகங்களும் கட்டப்பட்டுள்ளன. இந்த கடைகளுக்கான பொது ஏலம் மாநகராட்சி அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி தொடங்கியது.
முதல்நாளில் ஒரு கடை மட்டுமே ஏலம் விடப்பட்டது. 2-வது நாளில் 26 கடைகளும், 3-வது நாளில் 57 கடைகளும் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தின் மூலம் ரூ.9 கோடியே 50 லட்சம் வருவாய் கிடைத்தது. 4-வது நாளாக நேற்று பழைய பஸ் நிலையத்தில் 1 கடை, 2 உணவகங்கள், திருவையாறு பஸ் நிலையத்தில் 8 உணவகங்கள், ஒரு பெரிய கடைக்கான ஏலம் நடந்தது.
பழைய பஸ் நிலையத்தில்1 கடை மாத வாடகையாக ரூ.57 ஆயிரத்திற்கும், 2 உணவகங்கள் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரத்திற்கும், திருவையாறு பஸ் நிலையத்தில் 1 பெரிய கடை ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்திற்கும், 3 உணவகம் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.27 ஆயிரத்திற்கும் ஏலம் போனது. இன்னும் 5 உணவகங்கள் மட்டும் ஏலம் விட வேண்டியது உள்ளது. இதுவரை விடப்பட்ட ஏலத்தின் மூலம் தஞ்சை மாநகராட்சிக்கு ரூ.11 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
Related Tags :
Next Story