ஆதிதிராவிடர் நலத்துறை கையகப்படுத்திய இடத்திற்கு இழப்பீ்டு வழங்காததால் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு
ஆதிதிராவிடர் நலத்துறை கையகப்படுத்திய இடத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம்,
இழப்பீட்டு தொகை
விழுப்புரம் அருகே உள்ள கெடாரை சேர்ந்தவர் ராமமூர்த்தி மனைவி பத்மாவதி (வயது 55). இவருக்கு சொந்தமாக 5½ ஏக்கர் இடம் அதே பகுதியில் இருந்தது. கடந்த 1999-ம் ஆண்டில் ஏழை மக்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்குவதற்காக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பத்மாவதியின் இடம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக அவருக்கு இழப்பீடாக ரூ.1 லட்சத்து 55 ஆயிரத்து 518 வழங்க முடிவு செய்யப்பட்டது.
இந்த இழப்பீட்டு தொகை போதாது என்றும், இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கும்படியும் விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் பத்மாவதி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், பத்மாவதிக்கு இழப்பீட்டு தொகையாக ரூ.24 லட்சத்து 88 ஆயிரத்து 277-ஐ ஆதிதிராவிடர் நலத்துறை வழங்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வழங்காவிட்டால் வட்டியுடன் சேர்த்து தொகை வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஜப்தி செய்ய முயற்சி
இதன்படி வட்டியுடன் சேர்த்து ரூ.37 லட்சத்தை பத்மாவதிக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மீதமுள்ள ரூ.11 லட்சத்தை வழங்காமல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிதிராவிடர் நலத்துறை காலம் தாழ்த்தி வந்தது. இதனால் மனுதாரர் சார்பில் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இம்மனுவை விசாரித்த நீதிபதி விஜயகுமார், மனுதாரர் பத்மாவதிக்கு வழங்க வேண்டிய ரூ.11 லட்சத்தை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் ஆதிதிராவிடர் நலத்துறை வழங்க வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில் அந்த தொகைக்குரிய அசையும் சொத்துக்களை ஜப்தி செய்ய நேரிடும் என்று கடந்த 13.8.2021 அன்று உத்தரவிட்டார்.
இந்நிலையில் குறிப்பிட்ட காலக்கெடு முடிந்த பின்னரும் பத்மாவதிக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டு தொகையை ஆதிதிராவிடர் நலத்துறை வழங்கவில்லை. இதையடுத்து நேற்று கோர்ட்டு உத்தரவின்படி விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தை ஜப்தி செய்ய வக்கீல் தரணிவேந்தன், வக்கீல் குமாஸ்தா ஜோசப், முதுநிலை கட்டளை நிறைவேற்றுனர் சுந்தரமூர்த்தி, மனுதாரர் பத்மாவதி ஆகியோர் வந்தனர்.
பேச்சுவார்த்தை
உடனே அவர்களிடம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) மோகன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது 10 நாட்கள் அவகாசம் தரும்படியும், அதற்குள் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்களிடம் பேசி இழப்பீட்டு தொகையை வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனை ஏற்றுக்கொண்ட கோர்ட்டு ஊழியர்கள், தற்காலிகமாக ஜப்தி நடவடிக்கையை கைவிட்டு அங்கிருந்து திரும்பிச்சென்றனர்.
ஆதிதிராவிடர் நலத்துறை கையகப்படுத்திய இடத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்காததால் கலெக்டர் அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட்டு ஊழியர்கள் வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story