பிளஸ்-2 துணை தேர்வு மையத்தில் கலெக்டர் ஆய்வு
திண்டுக்கல்லில் அமைக்கப்பட்டிருந்த பிளஸ்-2 துணைத்தேர்வு மையத்தில் கலெக்டர் விசாகன் ஆய்வு செய்தார்.
திண்டுக்கல்:
கொரோனா ஊரடங்கு காரணமாக பிளஸ்-2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் தேர்வு எழுதாமலேயே பிளஸ்-2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுவிட்டதாக அரசு அறிவித்து மதிப்பெண் பட்டியலையும் வெளியிட்டது.
இந்த மதிப்பெண்களில் திருப்தி அடையாத மாணவர்களுக்கு துணை தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி துணை தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு கடந்த 6-ந்தேதி முதல் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திண்டுக்கல்லில் சீலப்பாடி அக்ஷயா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிரீன்பார்க் மெட்ரிக் பள்ளி உள்பட மாவட்டம் முழுவதும் 5 பள்ளிகளில் பிளஸ்-2 துணை தேர்வு நேற்று நடந்தது. தேர்வு எழுத 278 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதில் 190 பேர் தேர்வு எழுதினர். இந்த நிலையில் சீலப்பாடி அக்ஷயா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்ட துணை தேர்வு மையத்தை கலெக்டர் விசாகன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள துணை தேர்வு மையங்களில் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன. தேர்வு அறைகள், இருக்கைகள் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வு எழுத வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர்களின் கைகளை சுத்தப்படுத்திக்கொள்ள கிருமிநாசினி வழங்கப்பட்டது. இதையடுத்து அவகள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மாணவர்கள் அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடித்து தேர்வு எழுதினர் என்றார்.
Related Tags :
Next Story