மாத்தூரில் பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை கந்தர்வகோட்டையில் சாமி ஆடிய மூதாட்டி சாவு


மாத்தூரில்  பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை கந்தர்வகோட்டையில் சாமி ஆடிய மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 18 Aug 2021 11:12 PM IST (Updated: 18 Aug 2021 11:12 PM IST)
t-max-icont-min-icon

மாத்தூரில் தீக்குளித்து பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். கந்தர்வகோட்டையில் அருள் வந்து சாமியாடி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.

ஆவூர்:
11-ம் வகுப்பு மாணவி 
திருச்சி விமானநிலையம், காமராஜர் நகரை சேர்ந்தவர் பீர்முகம்மது. லாரி டிரைவரான இவருக்கு மனைவி மற்றும் 4 குழந்தைகள் உள்ளனர். இதில் அவரது மூத்த மகளான ராபியா (வயது 16) புதுக்கோட்டை மாவட்டம், மாத்தூரில் உள்ள அவரது அத்தை வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள அரசு சிறப்பு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் ராபியா சரியாக படிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது. 
இதனால் அவரது பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த ராபியா நேற்று மாலை அவரது அத்தை வீட்டில் மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டு அலறி உள்ளார். பக்கத்து வீட்டுக்காரர்கள் ராபியா வீட்டில் இருந்து புகை வருவதை கண்டு அங்கு ஜன்னல் வழியாக பார்த்தபோது அங்கு ராபியா தீயில் கருகியபடி உயிருக்கு போராடி கொண்டிருந்தார். 
சாவு 
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அவரது பெற்றோருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து அங்கு ஆம்புலன்சில் வந்த மருத்துவ பணியாளர்கள் தீயில் கருகி கிடந்த ராபியாவை பரிசோதனை செய்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதற்கிடையே மாணவியின் பெற்றோர் அலறி அடித்துக்கொண்டு அங்குவந்து தீயில் கருகி கிடந்த தங்களது மகளை பார்த்து கதறி அழுதனர். மாத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு வந்து ராபியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராபியா எதனால் இறந்தார்? அவரது இறப்பிற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சாமியாடிய மூதாட்டி சாவு 
கந்தர்வகோட்டை அருகிலுள்ள நடுப்பட்டி கிராமத்தை சேர்ந்த பழனியப்பன் மனைவி வெள்ளையம்மாள் (60). இவர் தனது வீட்டில் அருள் வந்து சாமி ஆடிக்கொண்டிருந்தார். அப்போது கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இவர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். 
இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
2 பெண்கள் காயம்
காரையூர் அருகே உள்ள கூடுதலைப்பட்டியை சேர்ந்தவர் நல்லாமாள். இவரது மகள் முத்துமணி. இவரது குழந்தைகள் பக்கத்து வீட்டில் உள்ள அழகம்மாள் என்பவரது வீட்டின் சுவற்றின் ஓவியங்கள் மீது எழுதி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அழகம்மாளுக்கும், முத்துமணிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் 2 பேரும் காயமடைந்தனர். 
இதில் முத்துமணி வலையப்பட்டி அரசு மருத்துவமனையிலும், அழகம்மாள் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து காரையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story