வேப்பூரில் இருந்து சரக்கு வாகனத்தில் 2,100 கிலோ ரேஷன் அரிசி கடத்தல் டிரைவர் கைது
வேப்பூரில் இருந்து சேலம் மாவட்டத்துக்கு சரக்கு வாகனத்தில் 2,100 கிலோ ரேஷன் அரிசி கடத்தி சென்றவரை போலீசார் கைது செய்தனர்
கடலூர்,
கடலூர் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் கல்பனா தலைமையிலான போலீசார் நேற்று வேப்பூர் அருகே காஞ்சிராங்குளம் பேருந்து நிறுத்தம் அருகில் வேப்பூர்-சேலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை போலீசார் வழிமறித்தனர். இதை பார்த்த டிரைவர், சரக்கு வாகனத்தை நடுரோட்டிலேயே நிறுத்தி விட்டு, அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து சரக்கு வாகனத்தில் இருந்தவரை மடக்கி பிடித்த போலீசார், அதில் சோதனை செய்தனர். அப்போது அந்த சரக்கு வாகனம் முழுவதும் ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து பிடிபட்ட நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கைது
விசாரணையில் அவர் திட்டக்குடி அருகே உள்ள வைத்தியநாதபுரத்தை சேர்ந்த அய்யம்பெருமாள் மகன் ரவிச்சந்திரன் (வயது 40) என்பதும், கல்பூண்டி, கீழ்கல்பூண்டி, லட்சுமணபுரம், வேப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கியதும், பின்னர் அதனை மூட்டை மூட்டையாக கட்டிக்கொண்டு, கோழி தீவனத்திற்காக வேப்பூரில் இருந்து சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதிக்கு கடத்தி சென்றதும், தப்பி ஓடியவர் அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து தலா 50 கிலோ எடை கொண்ட 42 மூட்டைகளில் இருந்த 2,100 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து ரவிச்சந்திரனை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சிலம்பரசனை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story