குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைக்க சென்ற ஆணையரை பொதுமக்கள் முற்றுகை


குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைக்க சென்ற ஆணையரை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 19 Aug 2021 1:47 AM IST (Updated: 19 Aug 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை கரந்தையில் குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைக்க சென்ற மாநகராட்சி ஆணையரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் பாதாள சாக்கடை நீர் சாலையில் வழிந்தோடுவதை சரி செய்ய வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்:
தஞ்சை கரந்தையில் குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைக்க சென்ற மாநகராட்சி ஆணையரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அப்போது அவர்கள் பாதாள சாக்கடை நீர் சாலையில் வழிந்தோடுவதை சரி செய்ய வலியுறுத்தினர்.
வரலாற்று சிறப்பு மிக்க குளம்
தஞ்சை மாநகரில் மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்ட குளங்களில் பல முற்றிலும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள குளங்களும் அழிவின் விளிம்பில் உள்ளன. இந்த குளங்கள் அனைத்துக்கும் ஒரு குளத்தில் இருந்து மற்றொரு குளத்திற்கு தண்ணீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டது.
இதன் மூலம் தஞ்சை மாநகரில் நிலத்தடி நீர் மட்டம் உயரும் வகையில் இந்த குளங்கள் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள மற்றும் அழிவின் விளிம்பில் உள்ள குளங்களை தூர்வாரி தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் முற்றுகை
இதையடுத்து தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், தன்னார்வ அமைப்புகள் மற்றும் ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து வரலாற்று சிறப்பு மிக்க குளங்களை புனரமைப்பு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக தஞ்சை கரந்தையில் உள்ள கிருஷ்ணன் குளம் நேற்று தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்து.
இதனை தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தொடங்கி வைத்தார். இதையடுத்து பொக்லின் எந்திரம் மூலம் குளம் தூர்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் தூர்வாரும் பணியை தொடங்கி வைக்க வந்த மாநகராட்சி ஆணையரை, கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள தைக்கால் தெருவை சேர்ந்த பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
சரி செய்வதாக உறுதி
அப்போது அவர்கள் தைக்கால் தெருவில் 1 ஆண்டுக்கும் மேலாக பாதாள சாக்கடை நீர் சரியாக செல்லாமல் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே இதனை முதலில் சீர் செய்து தர வேண்டும் என வலியுறுத்தினர்.
இதையடுத்து பாதாள சாக்கடை வழிந்தோடும் இடத்திற்கு சென்று பார்வையிட்ட ஆணையர், இதனை உடனடியாக சீர் செய்து தருவதாக பொதுமக்களிடம் உறுதி கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story