கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை; கார் முன் பாய்ந்து தாயும் உயிரை மாய்த்தார்


கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை; கார் முன் பாய்ந்து தாயும் உயிரை மாய்த்தார்
x
தினத்தந்தி 19 Aug 2021 2:14 AM IST (Updated: 19 Aug 2021 2:14 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் நண்பர்களுடன் ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாயும் கார் முன்பாய்ந்து உயிரை மாய்த்து கொண்ட பரிதாபம் நடந்துள்ளது.

பெங்களூரு:
  
மாணவர் தற்கொலை

  பெங்களூரு விஜயநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட எம்.சி. லே-அவுட்டை சேர்ந்தவர் லீலாவதி. இவரது மகன் மோகன்கவுடா (வயது 19), கல்லூரி மாணவர். இவர், நேற்று முன்தினம் வெளியே சென்றுவிட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் செல்போனில் கேம் விளையாட செல்வதாக தாய் லீலாவதியிடம் சொல்லிவிட்டு மோகன்கவுடா அறைக்குள் சென்றார். அங்கு வைத்து மோகன்கவுடா தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார். இதை பார்த்து லீலாவதி அதிர்ச்சி அடைந்தார்.

  பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கில் தொங்கிய தனது மகனை மீட்டு தனியார் மருத்துவமனையில் லீலாவதி அனுமதித்தார். அங்கு மோகன்கவுடாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி மோகன்கவுடா பரிதாபமாக இறந்து விட்டார். இதுபற்றி மருத்துவமனையில் இருந்த லீலாவதியிடம் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டு அவர் அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

கார் முன் பாய்ந்து தற்கொலை

  பின்னர் மருத்துவமனையில் இருந்து லீலாவதி வெளியே வந்தார். வீட்டுக்கு செல்வதற்காக மருத்துவமனை முன்பாக உள்ள ரோட்டில் அவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வந்த ஒரு கார், லீலாவதி மீது மோதியதாக கூறப்பட்டது. இதனால் தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்தகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். தகவல் அறிந்ததும் விஜயநகர் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து தாய், மகனின் உடல்களையும் கைப்பற்றி விசாரித்தனர்.

  அப்போது மோட்டார் சைக்கிள் விவகாரத்தில் தனது நண்பர்களுடன் மோகன்கவுடா சண்டை போட்டதாக தெரிகிறது. இதன் காரணமாக அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. மகன் இறந்து விட்டதால் மனம் உடைந்த லீலாவதி, கார் முன்பு பாய்ந்து தனது உயிரை மாய்த்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவங்கள் குறித்து விஜயநகர் சட்டம்-ஒழுங்கு, போக்குவரத்து போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஒரே நாளில் தாய், மகன் தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story