வேலூர் அருகே; காரில் கடத்திய 60 செம்மரக் கட்டைகள் பறிமுதல்


வேலூர் அருகே; காரில் கடத்திய 60 செம்மரக் கட்டைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Aug 2021 2:27 AM IST (Updated: 19 Aug 2021 2:27 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 60 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வேலூர்

வேலூர் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 60 செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

காரில் செம்மரக்கட்டைகள்

வேலூரை அடுத்த பொய்கை அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அணுகுசாலையோரம் நேற்று மாலை கர்நாடக பதிவெண் கொண்ட கார் ஒன்று வெகுநேரமாக நின்று கொண்டிருந்தது. 

காரில் டிரைவர் உள்பட யாரும் இல்லை. அதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரிஞ்சிபுரம் சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.

காரின் டிரைவர் அல்லது உரிமையாளர் அந்த பகுதியில் உள்ள டீக்கடை அல்லது ஓட்டலில் உள்ளனரா என்று போலீசார் விசாரித்தனர். ஆனால் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை. 

அதைத்தொடர்ந்து போலீசார் காரை திறந்து சோதனை செய்தனர். காரின் உள்ளே பின்பகுதியில் செம்மரக்கடைகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. 
இதுகுறித்து உயர் அதிகாரிகள் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வனத்துறையினரிடம் ஒப்படைப்பு

காரில் சாவி இல்லை. அதையடுத்து மெக்கானிக் அங்கு வரவழைக்கப்பட்டு, செம்மரக்கட்டைகளுடன் கார் விரிஞ்சிபுரம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. 

சிறிது நேரத்தில் வேலூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட்ஜான், இன்ஸ்பெக்டர் சுபா மற்றும் வேலூர் வனச்சரகர் ரவிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் போலீஸ் நிலையத்துக்கு வந்து காரில் இருந்த செம்மரக்கட்டைகளை பார்வையிட்டு விசாரித்தனர்.

காரில் 60 செம்மரக்கட்டைகள் இருந்தன. வனத்துறையினர் ஆய்வுக்கு பின்னர் செம்மரக்கட்டைகள் சுமார் 300 கிலோ எடை இருக்கும் என்றும், சிறிய அளவிலான செம்மரங்களை வெட்டி கடத்தி வந்திருப்பதாகவும் தெரிவித்தனர். செம்மரக்கட்டைகளுடன் கார் வேலூர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

உரிமையாளரின் விவரம்

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் பொய்கை மற்றும் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், செம்மரக்கட்டைகள் ஆந்திராவில் இருந்து காரில் வேலூர் வழியாக வேறு இடத்துக்கு கடத்தி செல்ல திட்டமிட்டிருக்கலாம்.

போலீசாரின் வாகன சோதனைக்கு பயந்தோ அல்லது செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாகவோ காரை சாலையோரம் நிறுத்தி சென்றிருக்கலாம். காரின் பதிவெண் மூலம் உரிமையாளரின் விவரம் பெற்று, அவரிடம் விசாரணை நடத்த உள்ளோம்.

அதன் பின்னரே முழுவிபரம் தெரிய வரும். கார் டிரைவர் மற்றும் செம்மரக்கட்டைகளை கடத்தி வந்தவர்கள் பொய்கை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ளார்களா என்று விசாரணை நடத்தி வருகிறோம் என்று தெரிவித்தனர்.

Next Story