கர்நாடகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது?; மந்திரி பி.சி.நாகேஸ் பதில்
கர்நாடகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது எப்போது? என்ற கேள்விக்கு மந்திரி பி.சி.நாகேஸ் பதிலளித்துள்ளார்.
பெங்களூரு:
பள்ளி கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஸ் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
ஆஜராவது கட்டாயமல்ல
கர்நாடகத்தில் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் வருகிற 23-ந் தேதி திறக்கப்படுகிறது. இதற்கான வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது. இதை அனைத்து பள்ளிகளும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். குழந்தைகளின் பாதுகாப்பு மிக முக்கியம். குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப விரும்பாத பெற்றோரை ஆசிரியர்கள் கட்டாயப்படுத்த கூடாது. அந்த குழந்தைகள் ஆன்லைன் மூலம் கல்வி கற்பதை தொடர்ந்து மேற்கொள்ளலாம். குழந்தைகள் பள்ளிக்கு ஆஜராவது கட்டாயமல்ல.
பள்ளிகளில் குழந்தைகள் யாருக்காவது கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அந்த பள்ளி ஒரு வாரம் மூடப்படும். சானிடைசர் கிருமி நாசினியை தெளித்த பிறகு பள்ளி திறக்கப்படும். குழந்தைகளில் கற்றலில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த 1½ ஆண்டாக தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ஆலோசனை பெறப்படும்
ஆன்லைன் மூலம் கல்வி கற்பிக்கப்பட்டாலும், சுமார் 40 சதவீத குழந்தைகளுக்கு கல்வி கிடைக்கவில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன. 9 முதல் 12-ம் வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்புக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து கர்நாடகத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும். அதற்கு முன்பு நிபுணர் குழுவின் ஆலோசனை பெறப்படும்.
இவ்வாறு பி.சி.நாகேஸ் கூறினார்.
Related Tags :
Next Story