சிறையில் ஒருநாள் கைதியாக வாழ ஆசையா?; கர்நாடகத்தில் புதிய திட்டம் அமல்


சிறையில் ஒருநாள் கைதியாக வாழ ஆசையா?; கர்நாடகத்தில் புதிய திட்டம் அமல்
x
தினத்தந்தி 19 Aug 2021 3:21 AM IST (Updated: 19 Aug 2021 3:21 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் ஒரு சிறையில் ரூ.500 கொடுத்தால் ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.

பெலகாவி:

3 நேரம் சாப்பாடு

  பொதுவாக சிறையில் இருப்பவர்களுக்கு 3 மணி நேரமும் தவறாமல் உணவு வழங்கப்படும். இதனால் வெளியில் இருப்பதை விட சிறையில் இருந்து விடலாம் என்று பலர் விளையாட்டாக கூறுவது உண்டு. மணி அடித்தால் 3 நேரமும் சாப்பாடு கிடைத்து விடும் என்று சிலர் கூறுவதை நாம் கேள்வி பட்டு இருக்கிறோம்.

  இந்த நிலையில் கர்நாடகத்தில் உள்ள ஒரு சிறையில் ரூ.500 கொடுத்தால் ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. முதல்வன் படத்தில் அர்ஜூன் ஒரு நாள் முதல்வராக நடித்தது போல, ஒரு நாள் கைதியாக வாழ ஆசைப்படுபவர்கள் இந்த சிறைக்கு சென்று வரலாம். அதுபற்றிய விவரம் வருமாறு:-

கைதிகள் போல....

  பெலகாவியில் ஹிண்டல்கா சிறை உள்ளது. இந்த சிறையில் விசாரணை கைதிகள், ஆயுள் தண்டனை கைதிகள் என 500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த சிறையில் தான் ரூ.500 கட்டணம் செலுத்தினால் ஒரு நாள் முழுவதும் கைதியாக வாழும் திட்டத்தை அதிகாரிகள் அமல்படுத்த உள்ளனர். இதுகுறித்து அந்த சிறையின் அதிகாரிகள் கூறும்போது:-

  சிறையில் வாழ விரும்புபவர்களுக்காக ரூ.500 கட்டணம் செலுத்தி ஒரு நாள் முழுவதும் சிறையில் கைதியாக தங்கும் திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்து உள்ளோம். இதற்காக அரசின் அனுமதியை எதிர்பார்த்து உள்ளோம். இங்கு வருபவர்களுக்கு கைதியின் சீருடை, கைதி எண், கைதிகளுக்கு வழங்கப்படும் உணவு, கைதிகள் செய்யும் வேலைகள் ஆகியவை வழங்கப்படும். அவர்களும் கைதிகள் போலவே நடத்தப்படுவார்கள்.

  அவர்களுக்கு எந்த சலுகைகையும் அளிக்கப்படாது. இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியதன் நோக்கம் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கத்தில் தொடங்கப்பட்டு உள்ளது. கைதிகள் வாழ்க்கை குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த திட்டம் தொடங்கப்படுகிறது.
  இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Next Story