கர்நாடகத்தில் மின்னல், புயல் எச்சரிக்கை மையம் அமைக்க முடிவு; மந்திரி ஆர்.அசோக் பேட்டி


கர்நாடகத்தில் மின்னல், புயல் எச்சரிக்கை மையம் அமைக்க முடிவு; மந்திரி ஆர்.அசோக் பேட்டி
x
தினத்தந்தி 18 Aug 2021 10:00 PM GMT (Updated: 18 Aug 2021 10:00 PM GMT)

கர்நாடகத்தில் மக்களை இயற்கை பேரிடரில் இருந்து பாதுகாக்கும் வகையில் மின்னல், புயல் எச்சரிக்கை அமைப்பை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி ஆர்.அசோக் கூறினார்.

பெங்களூரு:

ஆலோசனை கூட்டம்

  கர்நாடக வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் நேற்று பெங்களூருவில் பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடகத்தில் ஏற்படும் வானிலை சீற்றங்கள், அதை முன்கூட்டியே அறிந்து கொள்வது, சேதங்கள் ஏற்படுவதை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின்னர் மந்திரி ஆர்.அசோக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  கர்நாடக மக்களை மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களில் இருந்து பாதுகாக்க மின்னல் மற்றும் புயல் எச்சரிக்கை மையத்தை அமைக்க ஒரு முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. இருப்பினும் மின்னல் மற்றும் புயல் எச்சரிக்கை குறித்து மக்களுக்கு தெளிவாகவும், அழுத்தமாகவும் எச்சரிக்கை விடுக்க வேண்டியது அவசியாக உள்ளது.

புயல் மற்றும் மின்னல்...

  துள்ளியமாக இந்த இடத்தில் மின்னல் தாக்கும், இந்த இடத்தில் புயல் உருவாகும், புயல் இந்த இடத்தை தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்க வேண்டியது முக்கியமாகும். கர்நாடக கடலோர மாவட்டங்களில் அமைந்திருக்கும் சில கிராமங்களை அடிக்கடி புயல் மற்றும் மின்னல்கள் தாக்கி வருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் புயலாலும், மின்னல் தாக்கியும் பலர் பலியாகி வருகிறார்கள். அதனால்தான் இந்த அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.

  இந்த திட்டம் மத்திய அரசின் ஒத்துழைப்புடன் அமைக்கப்படும் திட்டமாகும். இந்த அமைப்பின் தலைமை அலுவலகம் பெங்களூருவில் அமைக்கப்படும். மாநிலத்தில் மின்னல் மற்றும் புயல் பாதிப்பு ஏற்படுக்கூடிய இடங்களுக்கான கிராம பஞ்சாயத்துகள் பெங்களூரு தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்படும்.

மீனவர்களை எச்சரிக்க...

  இதுதவிர கர்நாடக கடலோர மாவட்டங்களில் மின்னல் மற்றும் புயல் எச்சரிக்கையை அறிவிக்கும் வகையில் அலாரம் ஒலிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த அலாரம் எலுப்பும் ஒலி சுமார் 6 கிலோ மீட்டர் தூரம் வரை எதிரொலிக்கும். 

முதல்கட்டமாக இந்த அமைப்பு மாநிலத்தில் 40 இடங்களில் அமைக்கப்படுகிறது. பின்னர் 60 இடங்களாக உயர்த்தப்படும். மீனவர்களுக்கு தேவையான எச்சரிக்கைகளை வழங்குவதில் இந்த திட்டம் உதவிகரமாக இருக்கும்.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story