ஏராளமான திட்டங்களை வழங்கி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது மத்திய அரசு
ஏராளமான திட்டங்களை வழங்கி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது மத்திய அரசு என்று நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
நாமக்கல், ஆக.19-
ஏராளமான திட்டங்களை வழங்கி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது மத்திய அரசு என்று நாமக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் கூறினார்.
உற்சாக வரவேற்பு
தமிழகத்தில் பா.ஜனதாவை வலுப்படுத்தும் வகையில் மத்திய தகவல் ஒலிப்பரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன், கடந்த 2 நாட்களாக கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் மக்கள் ஆசி யாத்திரை மேற்கொண்டார்.
3-வது நாளான நேற்று எல்.முருகன், நாமக்கல் மாவட்டத்தில் யாத்திரை மேற்கொண்டார். நாமக்கல் மணிக்கூண்டு அருகில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் மத்திய மந்திரி முருகன் கலந்து கொண்டு பேசும்போது கூறியதாவது:-
மத்திய மந்திரியாக பதவி ஏற்பவர்களை நாடாளுமன்றத்தில் பிரதமர் அறிமுகம் செய்து வைப்பது மரபு. ஆனால் புதிய மந்திரிகளை அறிமுகம் செய்து வைக்க விடாமல் எதிர்க்கட்சிகள் தடுத்துவிட்டன. எனவேதான் நாங்கள் நேரடியாக மக்களை சந்திக்க மக்கள் ஆசி யாத்திரை நடத்திக் கொண்டிருக்கிறோம்.
மத்திய அரசின் திட்டங்கள்
அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், இலவச கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் என பல்வேறு நலத்திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார். மத்திய அரசின் திட்டங்கள், மக்களுக்கு நேரடியாக சென்றடைய வேண்டும் என்பதற்காகவே நாங்கள் இந்த யாத்திரை நடத்தி கொண்டிருக்கிறோம்.
2014-ம் ஆண்டுக்கு முன்பு பெரும்பாலான கிராமங்களில் கழிப்பிடங்கள் இல்லாமல் இருந்தது. கடந்த 6 ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் மத்திய அரசு தண்ணீர் வசதியுடன் கழிப்பிடங்கள் கட்டி கொடுத்துள்ளன. விறகு அடுப்பில் சமைத்தவர்கள் இன்று கியாஸ் அடுப்பில் சமைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தியது மத்திய அரசு.
பிரதமர் ேமாடிக்கு நன்றி
எனது தாத்தா செருப்பு தைக்கும் தொழிலில் ஈடுபட்டு இருந்தார். எனது பெற்றோர் விவசாயம் செய்து வருகின்றனர். சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த எனக்கு மத்திய இணை மந்திரியாக வாய்ப்பு கொடுத்துள்ளார் பிரதமர் மோடி. அவருக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன். தமிழகத்தை முன்னேற்ற எனது பணிகள் இருக்க வேண்டும். அதற்காக மக்கள் ஆசியை பெற இந்த யாத்திரையை தொடங்கி உள்ளேன்.
இவ்வாறு எல்.முருகன் பேசினார்.
இரட்டிப்பாக மாறும்
முன்னதாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேசும் போது, தி.மு.க., அமைச்சர்களை சந்திக்க வேண்டும் என்றால் முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். ஆனால் பா.ஜனதாவில் பொறுப்பில் உள்ளவர்களை மக்கள் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ஆட்சிக்கு வந்த பிறகு, 7 ஆண்டுகளில் மட்டும், ரூ.7½ லட்சம் கோடி அளவில் திட்டங்களை பிரதமர் மோடி வழங்கி உள்ளார். மத்திய மந்திரி முருகன், டெல்லிக்கும், தமிழகத்துக்கும் ஒரு பாலமாக இருந்து செயல்பட உள்ளார். ஏற்கனவே மத்திய அரசிடம் இருந்து நலத்திட்டங்களை பெறுவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தற்போது அவை எல்.முருகன் மூலம் இரட்டிப்பாக மாற உள்ளது என்றார்.
பெற்றோரிடம் ஆசி
முன்னதாக மத்திய மந்திரி எல்.முருகன், கே.புதுப்பாளையத்தில் அவரது குலதெய்வமான நந்தகோபால் பெருமாள் கோவிலில் சாமி வழிபாடு செய்தார். அங்கு நடந்த கோமாதா பூஜையிலும் பங்கேற்றார். பின்னர் தனது தந்தை லோகநாதன், தாயார் வருதம்மாள் ஆகியோரை நேரில் சந்தித்து அவர்களது காலில் விழுந்து ஆசி பெற்றார். அவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார்.
கோனூர் கிராமத்தில் எல்.முருகனுக்கு, அரசு பள்ளி முன்னாள் மாணவர் சங்கம், பசுமை இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கோனூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு எல்.முருகன் சென்ற போது அங்கு ஆசிரியர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
மரக்கன்றுகள் நடும் திட்டம்
தொடர்ந்து ஜேசீஸ் சங்கம் சார்பில், ‘வாசம், சுவாசம்’ என்னும் திட்டத்தின் கீழ் 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். வள்ளிபுரம் ஏரியில் பா.ஜனதா இளைஞரணி சார்பில் 75-வது சுதந்திர தினத்தை நினைவு கூறும் வகையில், 75 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தையும் எல்.முருகன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து நாமக்கல் ஆஞ்சநேயர்,் நரசிம்மசாமி கோவில்களிலும் வழிபாடு செய்தார்.
நிகழ்ச்சிகளில் மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, முன்னாள் மாநில தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம், மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, பிரசார மற்றும் வெளியீட்டு பிரிவு மாநில செயலாளர் எம்.எஸ். மணியன், மாநில செயற்குழு உறுப்பினர் சிட்டுபிள்ளை மோகன், அபூர்வா மூலிகை மருந்து ஆராய்ச்சி நிறுவன டாக்டர் ராஜவேல் மற்றும் பா.ஜனதா மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.
டாக்டர்களுக்கு பாராட்டு
பின்னர் சேலம் புறப்பட்டு சென்ற எல்.முருகனுக்கு புதன்சந்தையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர். அங்கு கட்சி நிர்வாகி ஒருவரது வீட்டிற்கு சென்று தேநீர் அருந்தினார். தொடர்ந்து புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று கொரோனா காலத்தில் சிறப்பாக பணியாற்றிய டாக்டர்கள், செவிலியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
Related Tags :
Next Story