காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கக்கோரி வனத்துறையினரை சிறைபிடித்த ஆதிவாசி மக்கள்
கோழிக்கொல்லியில் வீட்டை உடைத்து அட்டகாசம் செய்யும் காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கக்கோரி வனத்துறையினரை ஆதிவாசி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர்
கோழிக்கொல்லியில் வீட்டை உடைத்து அட்டகாசம் செய்யும் காட்டுயானைகள் ஊருக்குள் வருவதை தடுக்கக்கோரி வனத்துறையினரை ஆதிவாசி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீட்டை உடைத்த காட்டுயானைகள்
நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் புளியம்பாரா அருகே கோழிக்கொல்லி ஆதிவாசி கிராமத்துக்குள் 2 காட்டுயானைகள் புகுந்தன.
தொடர்ந்து பெள்ளி(வயது 44) என்பவரது வீட்டை முற்றுகையிட்டன. வீட்டுக்குள் பெள்ளி, அவரது மனைவி ஓமனா(35), அக்காள் வெள்ளச்சி(52) மற்றும் குழந்தைகள் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது திடீரென வீட்டின் நான்கு பக்க சுவர்களையும் காட்டுயானைகள் உடைத்தன. இதனால் சுவர்கள் சரிந்து பெள்ளி, ஓமனா, வெள்ளச்சி ஆகியோர் மீது விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் கூச்சலிட்டனர்.
வனத்துறையினர் சிறைபிடிப்பு
அந்த சத்தம் கேட்டு ஆதிவாசி மக்கள் திரண்டு வந்து காட்டுயானைகளை விரட்டியடித்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் மீட்டு கூடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிஷ்டவசமாக குழந்தைகளுக்கு காயம் ஏற்படவில்லை.
இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் நேற்று காலை 9 மணிக்கு கோழிக்கொல்லி ஆதிவாசி கிராமத்துக்கு வந்தனர். அப்போது காட்டுயானைகள் வருகையை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றுக்கூறி வனத்துறையினரை ஆதிவாசி மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நடவடிக்கை எடுப்பதாக உறுதி
இதை அறிந்த கூடலூர் தாசில்தார் சிவக்குமார், தேவாலா போலீஸ் துணை சூப்பிரண்டு ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம், வனச்சரகர்கள் கணேசன், பிரசாத் ஆகியோர் நேரில் வந்து ஆதிவாசி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், காட்டுயானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க அகழி வெட்ட வேண்டும். சோலார் மின்வேலி பொருத்தவேண்டும். சேதமடைந்த வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை விடுத்தனர்.
அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். மேலும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்று மதியம் 12 மணிக்கு போராட்டத்தை ஆதிவாசி மக்கள் கைவிட்டனர். அதன்பின்னர் வனத்துறையினர், வருவாய்த்துறையினர், போலீசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story