மலைவாழ் மக்கள் பயன்படுத்த கூடிய பொருட்களை கொண்டு அருங்காட்சியகம்
பொள்ளாச்சி அருகே அட்டகட்டியில் மலைவாழ் மக்கள் பயன்படுத்த கூடிய பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே அட்டகட்டியில் மலைவாழ் மக்கள் பயன்படுத்த கூடிய பொருட்களை கொண்டு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களின் அழிந்து வரும் பாரம்பரியத்தை மீட்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு உள்ளனர்.
மலைவாழ் மக்கள்
ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டத்தின் கீழ் பொள்ளாச்சி, உலாந்தி, மானாம்பள்ளி, வால்பாறை ஆகிய வனச்சரகங்கள் வருகிறது. இங்கு எருமபாறை, உடுமன்பாறை, கல்லார்குடி, நெடுங்குன்று, கவர்க்கல், ஈத்தக்குழி, சர்க்கார்பதி, சின்னாறுபதி உள்ளிட்ட 17 வனக்கிராமங்களில் மலசர், முதுவர், மலை மலசர், காடர், இருவாளர் மற்றும் புலையர் இன மக்கள் உள்ளனர்.
இந்த நிலையில் மலைவாழ் மக்களின் கலாசாரம், பண்பாடு போன்றவை மாறி வருகிறது. அவர்களது நடனம், இசை போன்ற கலைகளும் அழிந்து வருகிறது. இதை மீட்டெடுக்கும் முயற்சியில் வனத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
நடனம், பாடல் பதிவு
இதன்படி வனத்துறையினர் வனக்கிராமங்களுக்கு நேரடியாக சென்று மலைவாழ் மக்களின் நடனம், இசை, பாடல் போன்றவற்றை வீடியோ பதிவு செய்து உள்ளனர். இதை ஆனைமலை புலிகள் காப்பக பொள்ளாச்சி கோட்டம் என்ற இணையதளத்திலும், யூடிப்பிலும் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மேலும் மலைவாழ் மக்கள் பயன்படுத்த கூடிய பொருட்களை சேகரித்து பொள்ளாச்சி அருகே அட்டகட்டியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு சமையல் செய்வதற்கு பயன்படுத்த மூங்கிலில் செய்யப்பட்ட கரண்டி, டம்ளர், வாத்தியம், ஆப்பு, தேன் எடுக்க பயன்படுத்த கூடிய ஆயுதங்கள், முறம், மீன் பிடிக்க பயன்படும் கூடை, எலி வீல், கைத்தடி போன்ற பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
அட்டகட்டியில் அருங்காட்சியகம்
பொள்ளாச்சி வனக் கோட்டத்தில் 6 வகையான பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் கலாசாரம் மாறிக் கொண்டு வருகிறது. வளர்ந்து வரும் இளம் தலைமுறையினருக்கு அவர்களது தாய் மொழி தெரிவதில்லை. அதை உச்சரிக்க சிரமப்படுகின்றனர்.
மேலும் பாரம்பரியமாக அவர்கள் பயன்படுத்தி வந்த பொருட்கள் மாறுகிறது. அவர்கள் சமவெளி பகுதி மக்களின் கலாசாரத்துடன் ஒன்றிணைந்து வாழ தொடங்கி விட்டனர்.
பழங்குடியின மக்களின் கலாசாரம், மொழியை பாதுகாக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றோம். ஒவ்வொரு மலைக்கிராமங்களுக்கும் சென்று அவர்களுடன் பேசி, அதை வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. மீன் பிடிக்க கூடிய குடை, அந்த காலத்தில் மூங்கிலில் தயார் செய்யப்பட்ட கரண்டி, தேன் எடுக்க கூடிய ஆயுதங்கள் போன்ற பொருட்களை கொண்டு அட்டகட்டியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. இதை பொதுமக்களும் அறிந்து கொள்ள வேண்டும்.
கலாசாரத்தை மீட்கும் முயற்சி
தற்போது கொரோனா காரணமாக சுற்றுலா தடை செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பரவல் முடிந்து மீண்டும் சுற்றுலா தொடங்கும் போது பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள். சுற்றுலா பயணிகளும் இங்கு பல்வேறு இனத்தை சேர்ந்த மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்வார்கள்.
மேலும் மலைவாழ் மக்கள் பயன்படுத்த கூடிய பொருட்களை சேகரித்து உள்ளோம். இது மலைவாழ் மக்கள் குறித்த விழிப்புணர்வுக்கு ஆக்கமாக இருக்கும். நடனம், ஆடல் பாடலை வீடியோ பதிவு செய்து பொதுமக்களுக்கு தெரியும் வகையில் அட்டகட்டி, டாப்சிலிப் போன்ற பகுதிகளில் ஒளிபரப்பப்படும். மற்ற பகுதி மக்களுடன் பழகுவதால் செட்டில்மென்ட் என்பது அழிந்து வருகிறது.
எனவே மலைவாழ் மக்களின் பாரம்பரியம், கலாசாரம், பண்பாட்டை மீட்கும் முயற்சி எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மலைவாழ் மக்கள் சேகரிக்கும் தேனிற்கு உரிய விலை கிடைப்பதில்லை. எனவே அவர்களது வாழ்வாதாரம் மேம்படுத்தவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story