ஏரிகளில் கூடுதலாக நீர் இருப்பு: சென்னை மாநகருக்கு குடிநீர் வினியோகம் அதிகரிப்பு
ஏரிகளில் கூடுதலாக நீர் இருப்பு இருப்பதால், சென்னை மாநகர பகுதிகளுக்கு 650 மில்லியன் லிட்டரில் இருந்து தற்போது 903 மில்லியன் லிட்டராக குடிநீர் வினியோகம் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
ஏரிகளில் கூடுதல் இருப்பு
சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியில் 2 ஆயிரத்து 228 மில்லியன் கன அடி (2.2 டி.எம்.சி.), சோழவரம் ஏரியில் 615 மில்லியன் கன அடி, புழல் ஏரியில் 2 ஆயிரத்து 599 மில்லியன் கன அடி (2.5 டி.எம்.சி.), செம்பரம்பாக்கம் ஏரியில் 2 ஆயிரத்து 483 மில்லியன் கன அடி (2.4 டி.எம்.சி.), கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரியில் 486 மில்லியன் கன அடி மற்றும் வீராணம் ஏரியில் 682 மில்லியன் கன அடி உள்பட 9 ஆயிரத்து 93 மில்லியன் கன அடி (9 டி.எம்.சி.) இருப்பு உள்ளது.சென்னை மாநகருக்கு மாதம் 1 டி.எம்.சி. குடிநீர் தேவைப்படுகிறது. தற்போதைய இருப்புபடி அடுத்த 9 மாதங்களின் குடிநீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும். இதுதவிர வரவிருக்கும் பருவ மழை மூலம் ஏரிகளின் நீர்ப்பிடிப்புகள் வாயிலாக ஏரிகளுக்கு கூடுதலாக நீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
குடிநீர் வினியோகம் அதிகரிப்பு
இதனால் தற்போது சென்னை மாநகருக்கு கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குறிப்பாக நடப்பாண்டு தொடக்கத்தில் 650 மில்லியன் லிட்டர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த அளவு 903 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்பட்டு உள்ளது.குறிப்பாக குடிநீர் குழாய்கள் மூலம் 704.69 மில்லியன் லிட்டர், விரிவாக்கப்பட்ட மாநகர பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் 122.05 மில்லியன் லிட்டர், லாரிகள் மூலம் 19.16 மில்லியன் லிட்டர், விரிவாக்கப்பட்ட பகுதிகளுக்கு லாரிகளில் 13.47 மில்லியன் லிட்டர் உட்பட 859.37 மில்லியன் லிட்டர் வினியோகம் செய்யப்படுகிறது.இதுதவிர தொழிற்சாலைகளுக்கு 28.08 மில்லியன் லிட்டரும், மொத்தமாக வாங்கும் நுகர்வோர்களுக்கு 15.99 மில்லியன் லிட்டர் உட்பட 903.44 மில்லியன் லிட்டர் குடிநீர் வினியோகம் தொடங்கப்பட்டு உள்ளது. குடிநீர் வினியோகம் அதிகரிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
மேற்கண்ட தகவல்களை சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story