திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் விரலி மஞ்சள் பறிமுதல்


திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற  2 டன் விரலி மஞ்சள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Aug 2021 5:03 PM IST (Updated: 19 Aug 2021 5:03 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே, இலங்கைக்கு கடத்த முயன்ற 2 டன் விரலி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி:
திருச்செந்தூர் அருகே இலங்கைக்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டு இருந்த 2 டன் விரலி மஞ்சளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
கண்காணிப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு கடல் வழியாக விரலி மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் அடிக்கடி கடத்தப்பட்டு வருகிறது. இதனால் தூத்துக்குடி மாவட்ட கடற்கரை முழுவதும் கடத்தலை தடுக்கும் வகையில் கியூ பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அவ்வப்போது கடத்தல் பொருட்கள் பிடிபட்டு வருகின்றன. தூத்துக்குடி பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியதால், கடத்தல்காரர்கள் மாவட்டத்தின் பிற கடற்கரை பகுதிகளை தேர்வு செய்து வருகின்றனர்.
விரலி மஞ்சள்
இந்த நிலையில் திருச்செந்தூர் அருகே உள்ள ஓடக்கரை கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு விரலி மஞ்சள் கடத்தப்பட இருப்பதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்ராஜ், ஜீவமணி தர்மராஜ், வில்லியம் பெஞ்சமின், ஏட்டு இருதய ராஜ்குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஓடக்கரை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு லோடு ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் 70 பைகள் இருந்தன. ஒவ்வொரு பையிலும் தலா 30 கிலோ வீதம் 2.1 டன் விரலி மஞ்சள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது.
பறிமுதல்
இதைத்தொடர்ந்து போலீசார் விரலி மஞ்சள் கடத்தியதாக நெல்லை கரையிருப்பை சேர்ந்த இசக்கிபாண்டி (வயது 38), தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த ராமர் (28) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், இலங்கைக்கு மஞ்சளை கடத்த முயன்றது தெரியவந்தது.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து லோடு ஆட்டோ, 2.1 டன் விரலி மஞ்சள் மற்றும் 8 மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் இலங்கை மதிப்பு சுமார் ரூ.80 லட்சம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் கைது செய்யப்பட்ட 2 பேரையும் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Next Story