கோடநாடு விவகாரத்தில் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை கனிமொழி எம்.பி. பேட்டி
கோடநாடு விவகாரத்தில் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
தூத்துக்குடி, ஆக.20-
கோடநாடு விவகாரத்தில் பழிவாங்கும் நடவடிக்கை இல்லை என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
பேட்டி
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் கனிமொழி எம்.பி. நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தேர்தல் வாக்குறுதிகளை யார் நிறைவேற்றாமல் இருந்தார்கள் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். 10 வருடமாக ஆட்சியில் இருந்து மக்களை தொடர்ந்து ஏமாற்றியதால், மக்கள் அவர்களுக்கு சரியான பாடத்தை கற்றுக் கொடுத்து உள்ளார்கள். அவர்கள் எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றியது கிடையாது.
ஆனால், முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதி போன்று, அவரது வழியில் ஆட்சி பொறுப்பேற்ற அன்றே தேர்தல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்ற தொடங்கி, இன்று வரை செய்து கொண்டு இருக்கிறார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். ஒரே நாளில் அனைத்து வாக்குறுதிகளையும் யாராலும் நிறைவேற்ற முடியாது. படிப்படியாக வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.
காழ்ப்புணர்ச்சி
தமிழக பட்ஜெட்டுக்கு முன்பு தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டது. தமிழகத்தின் நிதிநிலையை எந்த அளவுக்கு மோசமாக அவர்கள் விட்டு சென்றார்கள் என்பது தெரியும்.
இத்தகைய சூழலில், பிரச்சினைகளுக்கு இடையே தி.மு.க. அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றி வருகிறது. இதனை பொறுக்க முடியாமல், காழ்ப்புணர்ச்சி காரணமாக விமர்சிக்க வேண்டும், அரசியல் செய்ய வேண்டும் என்று செய்து கொண்டு இருக்கிறார்கள். அதனை யாரும் தடுக்க முடியாது.
கோடநாடு
கோடநாடு பிரச்சினை அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் வெளியில் வந்தது. ஒரு பத்திரிகையாளர்தான் அங்கு நடந்த உண்மைகளை வெளியில் கொண்டு வந்தார். தி.மு.க. யார் மீதும் காழ்ப்புணர்ச்சியால், பழிவாங்கும் நடவடிக்கையை மேற்கொள்ள இல்லை. ஒரு பெரிய கொலை வழக்கு, அதில் உள்ள சிக்கல்கள் பத்திரிகையாளர்களால் வெளியில் கொண்டு வரப்பட்டு உள்ளது. அரசு அதனை கண்டுகொள்ளாமல் இருக்க வாய்ப்பு கிடையாது. யாராக இருந்தாலும் அவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும். அரசாங்கம் தனது கடமையை செய்யும். அ.தி.மு.க.வினருக்கு மடியில் கனம் இருப்பதால் பயம் இருக்கலாம்.
முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதி ஆட்சி காலத்தில் ஜனநாயகம் கடைபிடிக்கப்பட்டது. அதேபோன்று கொரோனா காலத்தில் எதிர்க்கட்சியினரின் கருத்துக்களையும் கேட்டுதான் முதல்அமைச்சர் குழு அமைத்தார். அதேபோன்று சட்டமன்றத்தில் யார் எதிர்க்கட்சியாக இருந்தாலும், அந்த எதிர்க்கட்சியினருக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. ஆனால், அவர்கள் பேச முடியாமல் வெளியில் சென்று விடுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story