பெரியகுளம், தேனியில் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
பெரியகுளம், தேனி பகுதியில் வளர்ச்சித்திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
தேனி:
பெரியகுளம் ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் முரளிதரன் நேற்று பார்வையிட்டார். அப்போது லட்சுமிபுரத்தில் ரூ.13 லட்சம் மதிப்பில் நாற்றுப்பண்ணையில் 50 ஆயிரம் மரக்கன்று வளர்த்தல், பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகட்டுதல், தூய்மை பாரத இயக்கத்தின் சார்பில் சமுதாய கழிப்பிடம் கட்டுதல் ஆகிய பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் தேனி கே.ஆர்.ஆர். நகர், கர்னல் ஜான் பென்னிகுவிக் பஸ் நிலையத்தின் அருகில் நுண்ணுயிர் சிறு உரக்கிடங்கு கட்டும் பணி போன்ற பணிகளை பார்வையிட்டார்.
ரேஷன்கடைகள்
இதுபோல் சருத்துப்பட்டி, தேனி கே.ஆர்.ஆர். நகர், பாரஸ்ட்ரோடு 7-வது தெரு ஆகிய இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் கலெக்டர் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பொருட்கள் முறையாக வினியோகம் செய்யப்படுவது குறித்தும், பொருட்களின் இருப்பு விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் டாக்டர் தண்டபாணி, தேனி அல்லிநகரம் நகராட்சி ஆணையாளர் சுப்பையா, ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளர்கள் பிரகதீஸ்வரன், சுபா, நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேதுகுமார், ரவிச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
நல்லிணக்க நாள் உறுதிமொழி
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்தநாள் நல்லிணக்க நாளாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து நேற்று தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நல்லிணக்க உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
ஆண்டிப்பட்டியில் நேற்று நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி ஆண்டிப்பட்டி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலும், ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சவரியம்மாள்தேவி தலைமையிலும் போலீசார் உறுதிமொழி ஏற்றனர். ஆண்டிப்பட்டி தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர்.
Related Tags :
Next Story