போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு; பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை


போக்குவரத்து நெரிசலால் பாதிப்பு; பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 19 Aug 2021 6:53 PM IST (Updated: 19 Aug 2021 6:53 PM IST)
t-max-icont-min-icon

போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படுவதால் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்போரூர்,

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சியில் ரூ.42 கோடியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் 2018-ம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்டது.

காலவாக்கம் மற்றும் மீன் மார்க்கெட் பகுதிகளில் 2 கழிவுநீருந்து நிலையங்கள், தினமும் 4 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு நிலையம், பேரூராட்சி் பகுதியில் 23 கி.மீ. நீளத்துக்கு பாதாள சாக்கடை குழாய் புதைத்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.

கடந்த ஆண்டு 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாக குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கொரோனா ஊரடங்கு உத்தரவால் திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டன.

தற்போது மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த நிலையில், பழைய மாமல்லபுரம் சாலையில் பாதாள சாக்கடை திட்டத்துக்கான குழாய்கள் அமைப்பதற்காக ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளன.

இதன் காரணமாக, திருப்போரூர் ரவுண்டான பகுதியில் இருந்து இள்ளலூர் இணைப்பு சாலை வரை வாகனங்கள் எளிதில் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

எனவே பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, நகரின் முக்கிய சாலையான பழைய மாமல்லபுரம் சாலையில் பணிகள் நடைபெறுவதால், போக்குவரத்து சற்று பாதிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஓரிரு நாட்களில் பணிகளை நிறைவு செய்யும் வகையில் துரிதமாக மேற்கொண்டு வருகிறோம் என்றனர்.

Next Story