தூத்துக்குடி மாவட்டத்தில் 6 மாதங்களுக்கு பிறகு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 மாதங்களுக்கு பிறகு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று நடந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் 6 மாதங்களுக்கு பிறகு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று நடந்தது.
குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 25-ந் தேதி விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. அதன் பிறகு சட்டமன்ற தேர்தல் மற்றும் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களாக விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவில்லை.
தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து உள்ளது. இதைத்தொடர்ந்து காணொலி காட்சி மூலம் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 6 மாதங்களுக்கு பிறகு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நிவாரணத்தொகை
தூத்துக்குடி மாவட்டத்தில் 25 ஆண்டுகளுக்கு பிறகு கார் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், ஏரல் பகுதிகளில் 4 ஆயிரத்து 869 எக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் காலம் தவறி பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக ஏற்பட்ட பயிர் சேதங்களுக்கு நிவாரணத்தொகை கோரி 86 ஆயிரத்து 690 விவசாயிகளுக்கு ரூ.105.25 கோடி கருத்துரு அனுப்பப்பட்டது. இதில் இதுவரை 85 ஆயிரத்து 696 விவசாயிகளுக்கு ரூ.104 கோடி சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள தொகை விரைவில் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது நெல் அறுவடை தொடங்கி இருப்பதால் மாவட்டத்தில் 4 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன. இதனை பயன்படுத்தி விவசாயிகள் அதிக விலைக்கு நெல்லை விற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
55 விவசாயிகள்
பின்னர் விவசாயிகள் மாவட்டத்தில் உள்ள 12 வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் இருந்து காணொலி காட்சி மூலம் குறைகளை எடுத்துக் கூறினர்.
மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கத்தில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில், கூடுதல் கலெக்டரும், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனருமான சரவணன், வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) பழனிவேலாயுதம், கூட்டுறவு இணைப் பதிவாளர் சிவகாமி உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தனர்.
கூட்டத்தில், மாவட்டம் முழுவதும் 12 வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகங்களில் இருந்து மொத்தம் 55 விவசாயிகள் தங்கள் குறைகளை தெரிவித்தனர். அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்கள் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.
Related Tags :
Next Story