திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேர் கைது
திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
மங்கலம்
திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
வங்கதேச நாட்டவர்
திருப்பூர் மங்கலத்தை அடுத்த புக்கிளிபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பனியன் நிறுவனம் உள்ளது. இந்த பனியன் நிறுவனத்தில் வங்க தேசத்தை சேர்ந்த 5 பேர் சட்டவிரோதமாக தங்கி இருந்து தையல் தொழிலாளர்களாக வேலை பார்த்து வருவதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து மங்கலம் போலீசார் சம்பந்தப்பட்ட பனியன் நிறுவனத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு தையல் தொழிலாளர்களாக வேலை செய்து கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முகமது உசல்மியா (வயது 33), முகமது மொட்லிப் (26), அஷ்ரப்புல் (20), சையது உல்லா இஸ்மாயில் (24) மற்றும் பர்கத் உசேன் (27) என்றும் அவர்கள் 5 பேரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்தது.
5 பேர் கைது
இவர்களிடம் திருப்பூரில் தங்கி இருப்பதற்கான விசா, பாஸ்போர்ட் உள்பட எந்த ஆவணமும் இல்லை. மேலும் சட்ட விரோதமாக ஒரு ஆண்டாக இந்த பனியன் நிறுவனத்தில் தங்கி தையல் தொழிலாளர்களாக வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.
மேலும் இந்திய எல்லை பகுதியில் கண்காணிப்பு குறைந்தபோது அதன் வழியாக இந்தியாவுக்குள் ஊருடுவியதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து சட்ட விரோதமாக தங்கி இருந்ததாக இவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிமன்ற உத்தரவின்பேரில் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story