ரங்கே கவுண்டன்புதூர் சாலை அடைப்பு
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் எல்லையில் உள்ள ரங்கே கவுண்டன்புதூர் சாலையை அதிகாரிகள் அடைத்தனர்.
கிணத்துக்கடவு,
கேரளாவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் எல்லையில் உள்ள ரங்கே கவுண்டன்புதூர் சாலையை அதிகாரிகள் அடைத்தனர்.
கேரளாவில் கொரோனா
கேரள மாநிலத்தில் கொரோனா பரவல் மற்றும் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக-கேரள எல்லையையொட்டி உள்ள கோவை மாவட்டத்தில் சுகாதாரத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையொட்டி தமிழக-கேரள எல்லையில் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் இருந்து வீரப்ப கவுண்டனூர், ரங்கே கவுண்டன்புதூர், சின்னா கவுண்டனூர் ஆகிய 3 வழித்தடங்களில் கேரளாவிற்கு செல்ல வழி உள்ளது. இந்த வழியாக தமிழகத்திற்குள் வரும் வாகனங்கள் தீவிர கண்காணிப்புக்கு பிறகே அனுமதி வழங்கப்படுகிறது.
சாலைகள் அடைப்பு
கிணத்துகடவு தாலுகாவில் தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வழியில் வீரப்ப கவுண்டனூர் பகுதியில் மட்டும் போலீஸ் சோதனைச்சாவடி உள்ளது.
இங்கு போலீஸ், சுகாதாரத் துறை உள்ளிட்ட 5 துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால் ரங்கே கவுண்டன் புதூர், சின்னா கவுண்டனூர் ஆகிய பகுதிகளில் கண்காணிப்பு பணிக்கு போதிய ஆட்கள் இல்லை. இதனால் அந்த 2 வழித்தடங்களையும் முள் செடிகள் வைத்து முழுமையாக அதிகாரிகள் அடைத்துள்ளனர்.
இதனால் இந்த வழித்தடங்களில் தமிழகத்தில் இருந்தும், கேரளாவில் இருந்தும் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலை உள்ளது. தற்போது கிணத்துக்கடவு பகுதியில் இருந்து வீரப்ப கவுண்டனூர் வழியாக மட்டுமே வாகனங்கள் கேரளாவிற்கு சென்று வருகின்றன.
தீவிர கண்காணிப்பு
இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி கூறியதாவது:-
கிணத்துக்கடவு அருகே உள்ள வீரப்ப கவுண்டனூர் சோதனைச்சாவடி அருகே கேரள மாநிலம் உள்ளது.
தற்போது அருகில் உள்ள கேரள கிராமங்களில் கொரோனா தொற்றுபரவல் அதிகமாக இருப்பதால் தமிழக-கேரள எல்லையில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னர், உரிய ஆவணங்கள் இருந்தால் மட்டும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா தொற்று பரவாமல் இருக்க தமிழக-கேரள எல்லையில் சுகாதாரத்துறை மூலம் தடுப்பூசிகளும் வருவாய்த்துறை மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுவதால் தமிழக எல்லையோர கிராமங்களில் கொரானா தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
Related Tags :
Next Story