தெப்பக்குளத்தில் அதிகளவு மீன்கள் செத்ததற்கு காரணம் என்ன?


திருச்சி
x
திருச்சி
தினத்தந்தி 20 Aug 2021 12:54 AM IST (Updated: 20 Aug 2021 12:54 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி தெப்பக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள் அப்புறப்படுத்தப்பட்டன. அதிகளவு மீன்கள் செத்ததற்கு காரணம் என்ன? என்பது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

திருச்சி
கோவில் தெப்பக்குளம்
திருச்சி, மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தை மாநகராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இந்த குளத்தை சுற்றிலும் பர்மா பஜார், தரைக்கடைகள் உள்ளிட்டவை உள்ளன. கடைகளில் சேகரமாகும் குப்பைகளை ஒருசில கடைக்காரர்கள் தெப்பக்குளத்தில் தூக்கி வீசும் சம்பவங்கள் நடந்து வருகிறது. ஏற்கனவே, கடந்த ஓராண்டுக்கு முன்பு தெப்பக்குளத்தில் மிதந்த பிளாஸ்டிக் பைகள், குப்பைகளை மாநகராட்சி நிர்வாகம் அகற்றியதோடு அங்கு ஒளிரும் மின் விளக்குகளையும் அமைத்தது.
செத்து மிதந்த மீன்கள்
 இந்தநிலையில், ஓரளவு தண்ணீர் நிரம்பியுள்ள தெப்பக்குளத்தில் ஏராளமான மீன்கள் உள்ளன. கடந்த ஒரு வாரமாக குளத்தில் உள்ள மீன்கள் மர்மமான முறையில் திடீர், திடீரென செத்து மிதந்ததால் நாளடைவில் துர்நாற்றம் வீசியது.
இதுகுறித்த புகாரின் அடிப்படையில் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், செத்த மீன்களை அப்புறப்படுத்தி தண்ணீரை ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து குளத்தில் செத்து மிதந்த மீன்களை மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.
மீன் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு
மீன்கள் என்ன காரணத்துக்காக செத்தன என்பது குறித்து அறிய மீன்வளத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு நேற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி சுகாதார அலுவலர் டேவிட் மேற்பார்வையில் மீன் வளத்துறை அதிகாரிகள் நேற்று தெப்பக்குளத்தில் செத்து மிதந்த மீன்கள் மற்றும் உயிருடன் உள்ள மீன்களை பிடித்து ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில், மீன்கள் செத்ததுக்கு குளத்தில் ஆக்சிஜன் குறைபாடு மற்றும் இதமான தட்ப வெப்ப நிலையும், பரவலாக பெய்த மழையும் மீனுக்கு விஷத்தன்மை ஏற்பட்டு செத்திருக்கலாம் என்றும், குளத்து தண்ணீரில் பாசனம் அதிக அளவில் படிந்திருப்பதாலும் மீன்கள் செத்ததுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆகவே, தெப்பக்குளத்தில் தற்போது உள்ள தண்ணீரை முழுமையாக அகற்றி விட்டு புதிதாக தண்ணீரை நிரப்புவது குறித்து மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

Next Story