கர்நாடகத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சாலை வரி செலுத்த ஒரு மாதம் காலஅவகாசம்; மந்திரி ஸ்ரீராமுலு தகவல்
கர்நாடகத்தில் தனியார் பஸ் உரிமையாளர்கள் சாலை வரி செலுத்த ஒரு மாதம் கால அவகாசம் வழங்கி இருப்பதாக மந்திரி ஸ்ரீராமுலு தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
சாலை வரி செலுத்த..
கர்நாடக போக்குவரத்துத்துறை மந்திரி ஸ்ரீராமுலு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தனியார் பஸ் உரிமையாளர்கள் என்னை நேரில் சந்தித்து, கொரோனா பரவல் காரணமாக நெருக்கடியில் இருப்பதாகவும், அதனால் சாலை வரியை செலுத்த கால அவகாசம் வழங்குமாறும் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கஷ்டத்தை உணர்ந்து, தனியார் பஸ் உரிமையாளர்களின் நலன் கருதி வணிக வாகனங்களுக்கு சாலை வரி செலுத்த ஒரு மாத கால அவகாசம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒரு மாதம் கால அவகாசம்
கடந்த 15-ந் தேதி சாலை வரி செலுத்த வேண்டிய நிலையில், அதன் காலஅவகாசம் ஒரு மாதம் அதாவது வருகிற செப்டம்பர் மாதம் 15-ந் தேதி வழங்கப்பட்டுள்ளது.
அதே போல் செப்டம்பர் 15-ந் தேதி செலுத்த வேண்டிய வரியை அக்டோபர் மாதம் 15-ந் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்படும். இதன் மூலம் தாமதமாக வரி செலுத்துகிறவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது. இதனால் சுமார் 40 ஆயிரம் பஸ் உரிமையாளர்கள் பயன் பெறுவார்கள்.
இவ்வாறு அதில் ஸ்ரீராமுலு குறிப்பிட்டுள்ளார்.
Related Tags :
Next Story