முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி பல்லாரிக்கு செல்ல அனுமதி; சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு


முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி பல்லாரிக்கு செல்ல அனுமதி;  சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Aug 2021 1:56 AM IST (Updated: 20 Aug 2021 1:56 AM IST)
t-max-icont-min-icon

சட்டவிரோத கனிம தொழில் வழக்கில் கைதான முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி பல்லாரிக்கு செல்ல 8 வாரங்கள் அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

ஜனார்த்தனரெட்டி கைது

  கர்நாடக முன்னாள் மந்திரி ஜனார்த்தனரெட்டி மீது பல்லாரியில் சட்டவிரோதமான முறையில் கனிம தொழில் மேற்கொண்டதாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து கடந்த 2011-ம் ஆண்டு ஜனார்த்தனரெட்டி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்த வழக்கிலும் அவர் கைது செய்யப்பட்டார்.

  இதையடுத்து அவர் ஐதராபாத், பெங்களூரு பரப்பனஅக்ரஹாரா சிறை என்று மாறி மாறி சிறையில் இருந்தார். அவர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தார். அவருக்கு கடந்த 2015-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு சில நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கியது. அதில் முக்கியமாக அவர் தனது சொந்தமாவட்டமான பல்லாரிக்கு செல்லக்கூடாது என்று கூறப்பட்டது. இதையடுத்து அவர் பல்லாரிக்கு செல்லாமல் பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் தங்கியுள்ளார். மேலும் அவர் சுப்ரீம் கோர்ட்டின் அனுமதி பெற்று இதுவரை 8 முறை பல்லாரிக்கு சென்றுள்ளார்.

பல்லாரிக்கு செல்ல அனுமதி

  இந்த நிலையில் பல்லாரிக்கு செல்ல விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க கோரி ஜனார்த்தனரெட்டி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி வினித்சரண் தலைமையிலான அமர்வு, ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி ஜனார்த்தனரெட்டி பல்லாரிக்கு செல்ல அனுமதி வழங்கி உத்தரவிட்டது.

  அதே நேரத்தில் பல்லாரிக்கு செல்லும்போது, அந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் அவருக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6 ஆண்டுகளாக பல்லாரிக்கு செல்லாமல் தவித்த ஜனார்த்தனரெட்டிக்கு மிகப்பெரிய நிவாரணம் கிடைத்துள்ளது.

  கடந்த 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை எடியூரப்பா மந்திரிசபையில் ஜனார்த்தனரெட்டி மந்திரியாக பணியாற்றினார். அப்போது ரெட்டி சகோதரர்களின் அதிகாரம் மிக்கவர்களாக வலம் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story