கொரோனாவால் தாமதமான மழைக்கால கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை 13-ந் தேதி கூடுகிறது


கொரோனாவால் தாமதமான மழைக்கால கூட்டத்தொடருக்காக கர்நாடக சட்டசபை 13-ந் தேதி கூடுகிறது
x
தினத்தந்தி 20 Aug 2021 2:08 AM IST (Updated: 20 Aug 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

கொரோனாவால் தாமதமாக மழைக்கால கூட்டத் தொடருக்காக கர்நாடக சட்டசபை வருகிற 13-ந் தேதி தொடங்குவது என மந்திரி சபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு:

மழைக்கால கூட்டத்தொடர்

  கர்நாடக சட்டசபையின் கூட்டத்தொடர் ஆண்டுக்கு 4 முறை நடத்தப்படுகிறது. இதில் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் தொடங்கி நடக்கிறது. 2-வது கூட்டத்தொடர் பட்ஜெட் கூட்டத்தொடராக நடக்கிறது. 3-வதாக மழைக்கால கூட்டத்தொடரும், 4-வதாக குளிர்கால கூட்டத்தொடரும் நடக்கிறது.

  நடப்பு ஆண்டில் கவர்னர் உரை கூட்டத்தொடர், பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவடைந்தது. வழக்கமாக மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் நடைபெறும்.

கொரோனாவால் தாமதம்

  ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஜூலை மாதத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை. ஆகஸ்டு மாதம் இந்த கூட்டத்தொடர் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த மாதமும் கூட்டம் குறித்த தகவல் எதையும் அரசு அறிவிக்கவில்லை.

  இதற்கிடையே கர்நாடகத்தில் ஆட்சி தலைமை மாற்றம் நிகழ்ந்தது. முதல்-மந்திரியாக இருந்த எடியூரப்பா பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பதவி ஏற்றார்.

முக்கியமான மசோதாக்கள்

  பசவராஜ் பொம்மை பதவி ஏற்ற பிறகு முதல் முறையாக கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடக்கிறது. அதாவது வருகிற 13-ந் தேதி சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த கூட்டத்தொடர் 10 வேலை நாட்கள் அதாவது 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதுகுறித்து நேற்று நடைபெற்ற கர்நாடக மந்திரிசபை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

  பெங்களூரு விதான சவுதாவில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தொடரில் சில முக்கியமான மசோதாக்களை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. பசவராஜ் பொம்மை சட்டசபையில் எதிர்க்கட்சிகளை எவ்வாறு சமாளிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எடியூரப்பா முதல்-மந்திரியாக இருந்தபோது, அவர் சட்டசபை விவகாரத்துறையை கவனித்து வந்தார்.

கொரோனா தடுப்பு விதிகள்

  எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு அவர் பதிலளிப்பார். தற்போது பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக இருக்கிறார். அதனால் எதிர்க்கட்சிகளின் கொடுக்கும் நெருக்கடியை அவர் சரியான முறையில் சமாளிப்பார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். இந்த சட்டசபை கூட்டத்தொடரின்போது, கொரோனா தடுப்பு விதிமுறைகள் சரியான முறையில் கடைப்பிடிக்கப்படும் என்று மந்திரி மாதுசாமி கூறினார்.

  ஆண்டுக்கு ஒரு முறை பெலகாவியில் சட்டசபை கூட்டத்தொடர் நடத்தப்படும். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு முதல் பெலகாவியில் கூட்டத்தொடர் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

புயலை கிளப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

  இந்த கூட்டத்தொடரில் கொரோனா 3-வது அலையை எதிர்கொள்வது பற்றியும், மாநில வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது. அதே வேளையில் இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி புயலை கிளப்பவும் திட்டமிட்டுள்ளன.

  அதாவது தொலைபேசி ஒட்டு கேட்பு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தென்மேற்கு பருவமழை மற்றும் கொரோனா 2-வது அலையை தடுக்க தவறியதாக கூறி பிரச்சினையை கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த கூட்டத்தொடரில் காரசாரமான விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story