நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் செய்வதாக கூறி சேலம் ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு அ.தி.மு.க. தலைவர் மீது புகார்
நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் செய்வதாக கூறி சேலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
சேலம்
ஒன்றியக்குழு கூட்டம்
சேலம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அதன் தலைவர் (அ.தி.மு.க.) மல்லிகா வையாபுரி தலைமையில் நேற்று நடந்தது. இதில், தி.மு.க., அ.தி.மு.க.வை சேர்ந்த தலா 4 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த துணைத்தலைவர் அல்லி பங்கேற்கவில்லை
கூட்டம் தொடங்கியதும் தி.மு.க.வை சேர்ந்த 4 பெண் கவுன்சிலர்கள் சாந்தி, சுசீலா, மலர்கொடி, அமுதா ஆகியோர் எழுந்து, எங்களது வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ளது. அ.தி.மு.க. உறுப்பினர்களுக்கு மட்டும் நிதி ஒதுக்கீடு செய்கிறீர்கள். தி.மு.க.வை சேர்ந்த உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதில் பாரபட்சம் காட்டுகிறீர்கள் என்று குற்றம் சாட்டினர்.
கவுன்சிலர்கள் வெளிநடப்பு
தொடர்ந்து ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், மெஜாரிட்டி இல்லாததால் அ.தி.மு.க. ஒன்றியக்குழு தலைவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனக்கூறி தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து கூட்டத்தில் ஒன்றியக்குழு தலைவர் மல்லிகா வையாபுரி பேசும்போது, அனைத்து உறுப்பினர்களுக்கும் போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதேநேரத்தில் அ.தி.மு.க.வுக்கு 5 உறுப்பினர்கள் இருப்பதால், மெஜாரிட்டியை நிரூபிக்க தேவையில்லை, என்று கூறினார். முடிவில், 29 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து வெளிநடப்பு செய்த தி.மு.க. கவுன்சிலர்கள், ஒன்றியக்குழு தலைவர் மீது உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story