சேலத்தில் பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது அரசு நர்சிங் கல்லூரியில் 12 மாணவிகளுக்கு கொரோனா ஆஸ்பத்திரி ஊழியர்கள் அதிர்ச்சி
சேலத்தில் அரசு நர்சிங் கல்லூரியில் 12 மாணவிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம்
நர்சிங் மாணவிகள்
சேலம் இரும்பாலை ரோட்டில் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவ கல்லூரி மற்றும் செவிலியர் கல்லூரிகளில் கடந்த 16-ந் தேதி முதல் நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.
இதில் மருத்துவ மற்றும் நர்சிங் மாணவ- மாணவிகள் ஆஸ்பத்திரிகளில் உள்ள வார்டுகளிலும் படிப்பு தொடர்பாக பணிபுரிந்து வருகின்றனர். இதற்கிடையே நர்சிங் கல்லூரி 3-ம் ஆண்டு மாணவி ஒருவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
12 பேருக்கு கொரோனா
அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து நர்சிங் கல்லூரியில் இருந்த 176 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் மேலும் 11 மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 12 மாணவிகளும் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் தனிவார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஊழியர்கள் அதிர்ச்சி
மாணவிகளுக்கு கொரோனா தொற்று இருந்ததால் ஆஸ்பத்திரியில் மாணவிகளுடன் பணிபுரிந்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வார்டுகளில் உள்ள நோயாளிகளும் அச்சத்தில் உள்ளனர்.இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
100-க்கு கீழ் குறைந்தது
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது. அதன்பின்னர் மீண்டும் தொற்று பாதிப்பு 100-ஐ தாண்டியது.
நேற்று முன்தினம் 117 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் பாதிப்பு 100-க்கு கீழ் குறைந்தது. அதாவது 94 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.
ஒருவர் பலி
அதன்படி மாநகராட்சி பகுதியில் 16 பேர் பாதிக்கப்பட்டனர். இதே போல புறநகர், கிராமப்புறங்களை சேர்ந்த 50 பேருக்கும், காஞ்சீபுரம், சென்னை, பெரம்பலூர், திருச்சி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, நாமக்கல், கோவை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த 28 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் கொரோனாவுக்கு நேற்று ஒருவர் பலியானார்.
Related Tags :
Next Story