குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தன
பெரம்பலூர் அருகே குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தன.
பெரம்பலூர்:
அடுக்குமாடி குடியிருப்புகள்
பெரம்பலூர் துறைமங்கலம் பகுதிக்கு உட்பட்ட கவுள்பாளையத்தில் ரூ.41 கோடியே 2 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் 21 பிளாக்குகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் மற்றும் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் திருச்சி கோட்டத்தின் மூலம் கட்டப்பட்ட இந்த குடியிருப்புகளின் கட்டுமான பணிகள் கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டு, 2019-ம் ஆண்டு இறுதியில் முடிக்கப்பட்டது.
ஒவ்வொரு பிளாக்குகளிலும் 24 வீடுகள் என மொத்தம் 504 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு வீடும் தலா ரூ.8 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது. இதற்கான நிதியில் வீடு ஒன்றுக்கு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மத்திய அரசு மானியமாகவும், ரூ.5 லட்சம் மாநில அரசு மானியமாகவும் வழங்கப்பட்டது. மீதமுள்ள தொகையான ரூ.1 லட்சத்து 64 ஆயிரம் பயனாளிகளிடம் இருந்து பெறப்பட்டது.
வீடுகள் ஒதுக்கீடு
இந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வீடுகள், புறம்போக்கு பகுதிகளில் குடியிருந்தவர்கள் மற்றும் சொந்த வீடு இல்லாத நகர்ப்புற ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டன. தற்போது 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் பங்களிப்பு தொகை ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்தை முழுமையாக செலுத்தியவர்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் கடந்த ஜனவரி மாதம் குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது அங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்தன
இந்நிலையில் அந்த குடியிருப்புகளில் தரமற்ற கட்டுமான பணிகளால் பெரும்பாலான வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் சில வீடுகளில் சுற்றுப்புற சுவற்றை தொட்டாலே சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து வருவதாகவும், மாடி படிக்கட்டுகளும், மொட்டை மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியும் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து காணப்படுவதாகவும் அங்கு வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.
மேலும் இது குறித்து அவர்கள் கூறுகையில், தகுதியற்ற இடத்தில், தரமற்ற நிலையில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பின் அருகே கல்குவாரிகள் உள்ளன. வீட்டிற்கு குடி வந்த பிறகே, ரூ.1 லட்சத்துக்கு மேல் பராமரிப்பிற்காக செலவு செய்துள்ளோம். அந்த அளவுக்கு கட்டுமான பணிகள் மோசமாக இருந்தது. விரிசல் ஏற்பட்டுள்ள வீடுகளில் மராமத்து பணிகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் செய்து கொடுக்க வேண்டும். மேலும் வீட்டை கட்டிக்கொடுத்த கட்டிட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
பொறியாளர்கள் ஆய்வு
இதுகுறித்து தகவலறிந்த திருச்சி கோட்ட தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மேற்பார்வை பொறியாளர் வசந்தகுமார், நிர்வாக பொறியாளர் அழகு பொன்னையா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து வீடுகளின் கட்டுமானம் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், சில வீடுகளில் கட்டுமான பணிகள் தரமற்ற நிலையில் இருப்பதாகவும், அதனை மராமத்து பணி செய்து சரி செய்து கொடுக்கப்படும், என்றும் தெரிவித்தனர்.
சென்னை புளியந்தோப்பு பகுதியில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் கட்டிடத்தின் சுற்றுப்புற சுவற்றை அழுத்தினாலே சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து வருவதாகவும், தரமற்ற நிலையில் கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்ததை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை புளியந்தோப்பை போலவே பெரம்பலூரில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரிய குடியிருப்புகளிலும் கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதோடு, சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து வருவதாக அங்கு வசிக்கும் மக்கள் புகார் கூறியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story