மீஞ்சூர் அருகே, தொழிலாளி வெட்டிக்கொலை
மீஞ்சூர் அருகே மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருடியதை தட்டி கேட்ட ஆத்திரத்தில் தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
மீஞ்சூர்,
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த மேலூர் கிராமம் ஜோசப் தெருவை சேர்ந்தவர் கங்காதரன். இவரது மகன் ராஜேஷ் (வயது 24). கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 6 மாத குழந்தை உள்ளனர். நேற்று முன்தினம் சென்னை கத்திவாக்கம் பகுதியில் நடைபெற்ற கட்டிட பணிக்கு சென்ற அவர் வேலை முடிந்து இரவு மீஞ்சூரை அடுத்த நந்தியம்பாக்கம் ரெயில் நிலையத்திற்கு சென்றார்.
ரெயில் நிலையத்திற்கு வெளியே மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் சென்றபோது 2 பேர் அவரது மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் திருடி கொண்டிருந்தனர். இதை பார்த்த ராஜேஷ் அவர்களை கண்டித்தார்.
அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. அப்போது அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜேஷின் தலை, கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டினர். அலறல் சத்தம் கேட்கவே அங்கு இருந்தவர்கள், ரெயிலுக்காக காத்திருந்தவர்கள் அங்கு ஓடி வந்தனர். பெட்ரோல் திருட்டில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். தகவலறிந்த மீஞ்சூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடி கொண்டிருந்த ராஜேஷை காப்பாற்றி சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் தீவிரமாக விசாரித்து வந்த நிலையில் மவுத்தம்பேடு கிராமத்தில் பதுங்கியிருந்த கொலையில் தொடர்புடைய மவுத்தம்பேடு முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அப்பு என்கிற ராஜேஷ் (24), நந்தியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த தமிழ் என்கிற தமிழரசன் (24) ஆகியோரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story