கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் சிறை கலெக்டர் எச்சரிக்கை


கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் சிறை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 20 Aug 2021 7:46 PM IST (Updated: 20 Aug 2021 7:46 PM IST)
t-max-icont-min-icon

கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்தால் சிறை தண்டனை வழங்கப்படும் என்று தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.


தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
நம் நாட்டின் கலாசார பாரம்பரியத்தை பாதுகாக்கவும், கைத்தறி தொழில் நலிவடையாமல் பாதுகாக்கவும், கைத்தறி நெசவாளர்களின் நலன்களை தொடர்ந்து பாதுகாக்கவும் மத்திய அரசு கைத்தறி ரக ஒதுக்கீடு சட்டத்தை 1985-ம் ஆண்டு இயற்றியது. இச்சட்டத்தை அமல்படுத்தும் வகையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையில் அமலாக்கப்பிரிவு ஏற்படுத்தப்பட்டு மதுரையில் உதவி அமலாக்க அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
கைத்தறிக்கு என்று ஒதுக்கீடு செய்யப்பட்ட ரகங்களான பட்டு பார்டருடன் கூடிய சேலை, கட்டுக்கட்டி சாயமாக்கப்பட்ட நூலைக்கொண்டு உற்பத்தி செய்த சேலை, பட்டு பார்டருடன் கூடிய வேட்டி, துண்டு மற்றும் அங்கவஸ்திரம், லுங்கி, போர்வை, படுக்கை விரிப்பு, அலங்கார துணி, ஜமுக்காளம், உடைத்துணி, கம்பளி, சால்வை, சத்தார் ஆகிய ரகங்களில் குறிப்பிட்ட தொழில்நுட்ப குறிப்பீடுகளுடைய ரகங்களை விசைத்தறியில் உற்பத்தி செய்வது சட்ட மீறலாகும்.
இந்த ரகங்கள் விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படுகிறதா என்பது குறித்து அமலாக்கப்பிரிவு அலுவலர்கள் விசைத்தறி கூடங்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வின்போது, கைத்தறிக்கென ஒதுக்கப்பட்ட ரகங்கள் விசைத்தறிகளில் உற்பத்தி செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட விசைத்தறி உற்பத்தியாளர்கள் மீது போலீஸ் துறை மூலம் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தொடர்ந்து நீதிமன்றத்தின் மூலம் அதிகபட்சமாக 6 மாத கால சிறை தண்டனை அல்லது விசைத்தறி ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து தண்டனையாக வழங்கப்படும்.
கைத்தறிக்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட 11 வகையான ரகங்கள் குறித்து விளக்கம் பெற மதுரையில் உள்ள உதவி அமலாக்கப்பிரிவு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story