திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கு தடை
கொரோனா ஊரடங்கு, தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு பக்தர்கள் வர வேண்டாம் என்று கலெக்டர் முருகேஷ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
திருவண்ணாமலை
கொரோனா ஊரடங்கு, தளர்வுகளுடன் நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரிவலம் செல்வதற்கு பக்தர்கள் வர வேண்டாம் என்று கலெக்டர் முருகேஷ் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பவுர்ணமி கிரிவலம்
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் திகழ்கிறது.
இக்கோவிலுக்கு பின்புறம் உள்ள மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் மலை சுற்றும் பாதையில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் வருவதற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை புரிந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் திருவண்ணாமலையில் நாளை (சனிக்கிழமை) இரவு 7.19 மணி முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.17 வரை திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் 14 கிலோ மீட்டர் கிரிவலம் வருவதற்கு அனுமதி கிடையாது.
பக்தர்கள் வர வேண்டாம்
இதன் காரணமாக திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலம் வர வேண்டாம் என பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்டு கொள்ளப்படுகிறது.
தமிழக அரசின் கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் கட்டுபடுத்தவும், பொதுமக்களை பாதுகாக்கவும் எடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நடவடிக்கைக்கு பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story