தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை குளித்தலை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர் ஆர்வம்


தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை குளித்தலை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர் ஆர்வம்
x
தினத்தந்தி 20 Aug 2021 11:02 PM IST (Updated: 20 Aug 2021 11:02 PM IST)
t-max-icont-min-icon

தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளை குளித்தலை அரசு பள்ளியில் சேர்க்க பெற்றோர் ஆர்வம் காட்டிவருகின்றனர். மேலும், பள்ளியில் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குளித்தலை
அரசு பள்ளி
குளித்தலை நகர பகுதியில் மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த பள்ளியில் 600-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
குளித்தலை நகரம் மற்றும் சில கிராம பகுதிகளில் உள்ள சில பள்ளிகளில் பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவின்பேரில் கடந்த 2013-ம் ஆண்டு ஆங்கில வழி கல்வி தொடங்கப்பட்டது. போதிய இடவசதி இல்லாமை, ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் சில பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி நிறுத்தப்பட்டது. இருப்பினும் போதியளவு ஆசிரியர்கள் இல்லாத போதும் மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் தற்போது வரை தமிழ், ஆங்கில வழி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 
பரதநாட்டியம்
1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் துறைசார்ந்த அலுவலக அறிவிப்பின்படி மழலையர் வகுப்புகளான எல்.கே.ஜி., யு.கே.ஜி. கடந்த 2018-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. 
இப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வகுப்பு பாடங்கள் தவிர ஆங்கிலத்தில் பேச்சு பயிற்சி, இந்தி வகுப்பு, ஆங்கில கையெழுத்து, கணினி பயிற்சி போன்ற பயிற்சிகளும், பெண் குழந்தைகளுக்கு பரதநாட்டியம், நாட்டுக்கலை போன்ற நடன பயிற்சிகள் கற்றுத்தரப்படுகின்றன. இதில் ஒரு சில பயிற்சிகள் தினந்தோறும், வாரத்தில் 3 நாட்களும் என வகைப்படுத்தி கற்றுத்தரப்படுகிறது.
வேன் வசதி
இதுபோன்ற கூடுதல் பயிற்சிகள் அரசு பள்ளியில் கற்று தருவதால் குளித்தலை நகரப்பகுதி மட்டுமல்லாது குளித்தலை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து மாணவ- மாணவிகள் இப்பள்ளியில் சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். வெளியூர் மாணவர்கள் இப்பள்ளிக்கு அழைத்துவர தனியார் பள்ளிகளை போல் இப்பள்ளியில் வேன் வசதி செய்யப்பட்டுள்ளது. 
இப்பள்ளி சிறப்பாக செயல்படும் காரணத்தால் ஒவ்வொரு ஆண்டும் இப்பள்ளியில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. மேலும் ஒரு தனியார் பள்ளிக்கு இணையான வகையில் இப்பள்ளியில் பாடங்கள் மற்றும் சிறப்பு பயிற்சிகள் நடத்தப்படுவது தெரிந்த காரணத்தால், குளித்தலை பகுதியில் உள்ள பல தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்களை அரசு பள்ளியான மாரியம்மன் கோவில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சேர்க்க தற்போது பல பெற்றோர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆசிரியர்களை நியமிக்க கோரிக்கை
ஆண்டுக்காண்டு மாணவர்கள் எண்ணிக்கை கூடிக்கொண்டே வந்தாலும் மாணவ- மாணவிகளுக்கு கல்வி கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. அதுபோல மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப இப்பள்ளியில்  கூடுதல் கட்டிடங்கள் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. 
எனவே பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் இப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு பள்ளிக்கு தேவையான கூடுதல் வகுப்பறைகளை கட்டுவதுடன், போதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story