திருப்பணி தொடக்க விழா


திருப்பணி தொடக்க விழா
x
தினத்தந்தி 20 Aug 2021 11:10 PM IST (Updated: 20 Aug 2021 11:10 PM IST)
t-max-icont-min-icon

ஆலங்குடி குருபகவான் கோவிலில் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது.

நீடாமங்கலம்;
ஆலங்குடி குருபகவான் கோவிலில் திருப்பணி தொடக்க விழா நடைபெற்றது. 
குருபகவான் கோவில் 
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத்சகாயேஸ்வர குருபரிகார கோவில் உள்ளது. இந்த கோவிலில் பாலாலயம் மற்றும் திருப்பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது. நவக்கிரக தலங்களில் குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்கும் இந்த கோவில் குடமுழுக்கு கடந்த 2009-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ந் தேதி நடைபெற்றது. ஆலங்குடி குருபகவான் கோவிலில் குடமுழுக்கு நடந்து 12 ஆண்டுகள் கடந்த நிலையில் கோவிலில் திருப்பணி மற்றும் குடமுழுக்கு நடத்த அறநிலையத்துறை முன்வந்து உள்ளது. 
யாகசாலை பூஜைகள் 
இதை முன்னிட்டு கோவிலில் விநாயகர் வழிபாட்டுடன் யாகசாலை பூஜை நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு விமான  பாலாலயமும், 10 மணிக்கு திருப்பணி தொடக்கமும் நடைபெற்றது. விழாவில்  ஏலவார்குழலியம்மன், ஆபத்சகாயேஸ்வரர், குருதெட்சிணாமூர்த்தி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 4 யாக குண்டங்கள் வைக்கப்பட்டு யாகசாலை பூஜைகள் நடந்தது. சுவாமி, அம்பாள், குருதெட்சிணாமூர்த்தி, ராஜகோபுரங்கள், இதரசன்னதிகள், விமானங்கள் வரையப்பட்ட படங்களுக்கு யாகசாலையில் வைக்கப்பட்ட புனித நீர் மூலம் அபிஷேகம்  செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
பிரகார உலா
முன்னதாக புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்களை யாக சாலையிலிருந்து சிவாச்சாரியார்கள் எடுத்து பிரகார உலாவாக வந்தனர். யாகசாலை பூஜைகளை சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களை கூறியும்,  ஓதுவாமூர்த்தி தேவாரம் பாடியும் நடத்தி வைத்தனர். விழாவில் அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் கோவில் தக்கார் ஹரிஹரன், அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் செயல்அலுவலர் தமிழ்ச்செல்வி, தி.மு.க. ஒன்றிய செயலாளர் தெட்சிணாமூர்த்தி மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். திருப்பணி தொடக்க விழாவில் தமிழக  அரசின்  கொரோனா தடுப்பு விதிகள் கடைபிடிக்கப்பட்டது. 

Next Story