தேர்தல் வாக்குறுதி எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை


தேர்தல் வாக்குறுதி எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை
x
தினத்தந்தி 20 Aug 2021 11:35 PM IST (Updated: 20 Aug 2021 11:35 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் வாக்குறுதி எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை என்று விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் பா.ஜ.க. விவசாய அணி மாநிலத்தலைவர் குற்றம்சாட்டினார்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் விவசாய அணி செயற்குழு கூட்டம் விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாய அணி மாவட்ட தலைவர் குட்டியாண்டி தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் பாபு என்கிற முருகையன் வரவேற்றார். கட்சியின் மாவட்ட தலைவர் கலிவரதன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக விவசாய அணி மாநிலத்தலைவர் நாகராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. ஏ.ஜி. சம்பத் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் தேசிய செயற்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் விஜயகுமார், மாநில துணைத்தலைவர் பாலாஜி, தகவல் தொடர்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் சிவதியாகராஜன், மாவட்ட பொதுச்செயலாளர் ராமஜெயக்குமார், நகர தலைவர் ஜெயசங்கர், பிற்படுத்தப்பட்டோர் அணி மாவட்ட தலைவர் துரை.சக்திவேல், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் தாஸசத்யன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் விவசாய அணி மாவட்ட பொதுச்செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை

முன்னதாக விவசாய அணியின் மாநிலத்தலைவர் நாகராஜ், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. நந்தன் கால்வாய் திட்டப்பணிகளில் ஊழல், பணியில் குறைபாடு என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். எங்கள் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உழவனோடு ஒரு நாள் என்ற திட்டத்தின் மூலம் தங்கி நந்தன் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பணிகளை பார்வையிட்டு அன்று மாலையில் விவசாயிகளுக்கான பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

குற்றச்சாட்டு

நெல் கொள்முதல் நிலையங்களை தி.மு.க.வினர் கையகப்படுத்தியுள்ளதாக புகார்கள் வருகிறது. விரைவில் விவசாயிகளுக்காக பா.ஜ.க. போராட்டம் நடத்தும். 100 நாள் ஆட்சியினால் மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை. அ.தி.மு.க. மீது குற்றம் சாட்டிய தி.மு.க., தன் ஆட்சியில் எவ்வித மாற்றத்தையும் கொண்டு வரவில்லை. தி.மு.க. பெட்டி வைத்து வாங்கிய மனுக்களின் நிலை என்ன ஆனது? ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்றார்கள். நீட் தேர்வை வைத்து ஆட்சியை பிடிப்பதே தி.மு.க.வின் நோக்கமாக இருந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story