பஸ் நிறுத்த நிழற்குடையில் தஞ்சமடைந்த தொழிலாளி குடும்பத்திற்கு தங்குமிடம்
பஸ் நிறுத்த நிழற்குடையில் தஞ்சமடைந்த தொழிலாளி குடும்பத்திற்கு தங்குமிடம் கிடைத்தது.
ஜெயங்கொண்டம்:
திருச்சி உறையூரை சேர்ந்தவர் சங்கர். இவர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். இவருடைய மனைவி கீதா. மகன் சபரிவாசன். கட்டிடங்களுக்கு டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்த சங்கருக்கு, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாத நோய் ஏற்பட்டு வலது கையும், காலும் செயல் இழந்துவிட்டது. இதனால் வேலைக்கு செல்ல முடியாமல் மிகவும் சிரமப்பட்டார். மேலும் வாடகை கொடுக்க பணமின்றி சிரமப்பட்டு வந்த அவர் வேறு வழியின்றி வீட்டை காலி செய்துவிட்டு, ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக உள்ள பஸ் நிறுத்த நிழற்குடையில் மனைவி, மகனுடன் சங்கர் தஞ்சமடைந்தார். கீதா வீட்டு வேலைக்கு சென்றும், சபரிவாசன் இருசக்கர வாகன பழுதுநீக்கும் பட்டறையிலும் வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். இது குறித்த செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் நேற்று வெளியானது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் நகராட்சி ஆணையர் சுபாஷினி மற்றும் தனியார் சங்கத்தினர் நேரில் சென்று சங்கரிடம் விசாரித்தனர். இதைத்தொடர்ந்து சங்கர் குடும்பத்தினர், செங்குந்தபுரம் கிராமத்தில் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா குடியிருப்பு கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சங்கரின் மனைவிக்கு கடை அல்லது நிறுவனங்களில் வேலைக்கு ஏற்பாடும் செய்யப்படவுள்ளது. மேலும் ஜெயங்கொண்டம் தாசில்தார் ஆனந்தன் செங்குந்தபுரத்தில் உள்ள சங்கரின் குடும்பத்தினருக்கு நேரில் சென்று 5 கிலோ அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் 2 போர்வை, 2 தலையணைகள் வழங்கினார். உதவிய அதிகாரிகள் மற்றும் செய்ததி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கு சங்கர் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.
Related Tags :
Next Story