ஓய்வு பெற்ற நிலக்கரி நிறுவன ஊழியர் வீட்டில் வெள்ளிப்பொருட்கள் திருட்டு
ஓய்வு பெற்ற நிலக்கரி நிறுவன ஊழியர் வீட்டில் வெள்ளிப்பொருட்களை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
ஜெயங்கொண்டம்:
வெள்ளிப்பொருட்கள் திருட்டு
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் மெயின்ரோட்டை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 65). இவர் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருடைய மனைவி தமிழ்ச்செல்வி(52). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். அவர்கள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். செல்வராஜ் வீட்டை பூட்டிவிட்டு, தனது மனைவியுடன் கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றார்.
இந்நிலையில் செல்வராஜ் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் இதுகுறித்து தமிழ்ச்செல்விக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வீட்டுக்கு வந்த தமிழ்ச்செல்வி, உள்ளே சென்று பீரோவை பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ வெள்ளிப்பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து தமிழ்ச்செல்வி ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
மோப்ப நாய் மூலம்...
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது, மர்ம நபர்கள் கடப்பாரையால் முன்பக்க கதவு பூட்டை உடைத்ததுடன், கடப்பாறையால் கதவை நெம்பி உள்ளே புகுந்துள்ளனர். அங்கு அறையில் இருந்த 2 பீரோவையும் உடைத்து அதில் இருந்த விளக்குகள், டம்ளர், தட்டுகள் உள்ளிட்ட ஒரு கிலோ வெள்ளி பொருட்களை திருடிச்சென்றது தெரியவந்தது. இதையடுத்து அரியலூரில் இருந்து கைரேகை நிபுணர் துர்காதேவி வரவழைக்கப்பட்டு, கைரேகைகளை சேகரித்தார்.
மேலும் செல்வக்குமார், ஸ்ரீநாத் ஆகியோருடன் மோப்ப நாய் டிக்சி வரவழைக்கப்பட்டு துப்பு துலக்கப்பட்டது. மோப்பநாய் செல்வராஜ் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி செங்குந்தபுரம் பஸ் நிறுத்தம் வரை சென்று, மீண்டும் வீட்டிற்கு வந்து படுத்து கொண்டது. பின்னர் மீண்டும் மோப்ப நாய், செல்வராஜ் வீட்டில் இருந்து செங்குந்தபுரம் காலனி தெருவிற்கு ஓடி மீண்டும் திரும்ப வீட்டிற்கு வந்து படுத்துக் கொண்டது. அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
தகவல் தெரிவிக்க வேண்டும்
செல்வராஜ், தங்க நகைகளை வங்கி லாக்கரில் வைத்திருந்ததால் நகைகள் தப்பின. இதுகுறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார். மெயின்ரோட்டில் உள்ள வீட்டில் நள்ளிரவில் நடந்த இந்த திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிர் கூறுகையில், வெளியூர் செல்லும்போது வீட்டின் உரிமையாளர்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று கூறியும், பொதுமக்கள் தகவல் தெரிவிப்பதில்லை. பக்கத்து வீட்டுக்காரர்கள் சத்தம் கேட்டு சந்தேகம் அடைந்தால் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்து உதவலாம். அதையும் செய்ய தவறி விடுகின்றனர். பொதுமக்கள் விழிப்பாக இல்லாததே இதற்கு காரணம். இதனை திருடர்கள் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டுள்ளனர். எனவே பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டம் தெரியவந்தால் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும், என்றார்.
Related Tags :
Next Story